ஊராட்சி செயலர்கள் நியமன முறைகேடு: ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இடைநீக்கம்

வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 33 ஊராட்சி செயலர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் ரூ. 3 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வேலூர் மாவட்ட

வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 33 ஊராட்சி செயலர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் ரூ. 3 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர் பணியிடங்கள் பல்வேறு காரணங்களால் காலியாக உள்ளன. இதையடுத்து, ஒரு ஊராட்சியைச் சேர்ந்த செயலர்கள் கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 ஊராட்சிகளின் பணிகளையும் கவனித்து வருகின்றனர். இதனால், ஊராட்சிகளில் வரி வசூல், குடிநீர் விநியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, சாலைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. இதையடுத்து, காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமித்திட ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த பணியிடங்கள் நியமனத்துக்கு, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆளுங்கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் மூலம் ஊராட்சியின் வருவாயைக் கணக்கில் கொண்டு, தலா ஒரு பணியிடத்துக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதன்படி, வேலூர் மாவட்டத்தில் காலியாக இருந்த 33 ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு கடந்த மே 8-ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்படாத நிலையில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் அவசர அவசரமாக மே 11-ஆம் தேதியே பணி ஆணை வழங்கப்பட்டு, 33 பேரும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளளனர். இந்த நியமனத்தை வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளே நேரடியாக மேற்கொண்டதாக புகார் எழுந்தன. 
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், மற்ற மாவட்டங்களில் ஊராட்சி செயலர் பணி நியமனம் ஆரம்ப கட்டத்திலேயே உள்ள நிலையில், வேலூர் மாவட்டத்தில் மட்டும் நேர்முகத் தேர்வு முடிந்து, அடுத்த சில நாள்களில் பணி நியமனமும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், இந்த நியமனம் மூலம் சுமார் ரூ. 3 கோடி வரை முறைகேடு நடைபெற்றதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) மு.பிச்சையாண்டியை சென்னையிலுள்ள ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையைத் தொடர்ந்து பிச்சையாண்டியை இடைநீக்கம் செய்து ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரகம் புதன்கிழமை மாலை உத்தரவிட்டது. 
ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, மாவட்டம் முழுவதும் ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள 33 பேரும் தங்கள் பணியிடம் தொடர்பாக அச்சமடைந்துள்ளனர். மேலும், இந்த ஊராட்சி செயலர் பணி நியமன முறைகேட்டில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்களுக்கும், மேலும் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படக் கூடும் என அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com