துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கை நிராகரிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவில் மாற்றம் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் ஜிம்ராஜ் மில்டன், பார்வேந்தன் மற்றும் பாவேந்தன் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அந்த மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரியிருந்தனர். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்குப்பின் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி...இந்நிலையில் இந்த உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசு சார்பில் வியாழக்கிழமை கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், உயர் நீதிமன்றம் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடல்களைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால், பலியானவர்களின் உடல்களைக் கேட்டு அவர்களது உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு எவ்வாறு செயல்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் பலியானவர்களின் உடல்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இந்த மனு நீதிபதிகள் டி.ரவீந்திரன் மற்றும் பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏ.எல்.சோமையாஜி, பலியானவர்களின் உடல்களைக் கேட்டு அவர்களின் உறவினர்கள் அரசுக்குக் கடிதம் அளித்துள்ளனர். நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் காரணமாக உடல்களை தரமுடியவில்லை. இதுவும் பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை அவர்களது முறைப்படி கண்ணியமான முறையில் அடக்கம் செய்ய வேண்டியுள்ளது என்றார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆர்.சங்கரசுப்பு, "அப்பாவி பொதுமக்களை சுட்டுக் கொன்ற தமிழக போலீஸார், உடல்கள் மீதான கண்ணியத்தைக் காப்பதாகக் கூறுவது வேதனையளிக்கிறது' எனக் கூறி, அரசுத் தரப்பு கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
உறவினர்கள் யாரும் கேட்கவில்லை: அப்போது நீதிபதிகள், "உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் மாற்றம் செய்யக் கோரி இறந்தவர்களின் உறவினர்கள் யாரும் நீதிமன்றத்தை நாடவில்லை. எனவே, அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது' என மறுப்புத் தெரிவித்தனர். அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர், இந்த வழக்கைத் தொடர்ந்தவர்கள் கூட பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது என வாதிட்டார்.
மாற்றம் செய்ய முடியாது: இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தற்போதைய சூழலில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. எனவே, அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது. 
மேலும், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தக் கூடுதல் மனுவுக்கு மனுதாரர்கள் சார்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் மே 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com