தூத்துக்குடி சம்பவம்: தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.-க்கள் சுமார் 30 பேர் முதல்வர் அறையை முற்றுகையிட முயற்சி செய்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள்.
சென்னை தலைமைச் செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பேரவை உறுப்பினர்கள்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.-க்கள் சுமார் 30 பேர் முதல்வர் அறையை முற்றுகையிட முயற்சி செய்தனர். போலீஸார் தடுத்து நிறுத்தவே, அங்கேயே தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-க்கள் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கடற்கரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.-க்கள் கைது செய்யப்பட்டு ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சட்டப் பேரவை கூட்டத் தொடரை இறுதி செய்வதற்காக அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதற்கான காரணங்களை விளக்கி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவருடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.-க்கள் இருந்தனர்.
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததும், பேரவை வளாகத்துக்குள் திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நுழைந்தனர். அவர்கள் நேராக முதல்வர் அறையை நோக்கிச் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களில் பாதி எம்.எல்.ஏ.-க்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். துரைமுருகன் உள்ளிட்ட சில மூத்த எம்.எல்.ஏ.-க்கள் முதல்வரின் அறை அமைந்துள்ள லாபி வரை சென்றனர். அதேசமயம், லாபி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் அறையை முற்றுகையிட திமுக எம்.எல்.ஏ.,க்கள் முயன்ற போது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கைகலப்பு-அமளி: முதல்வர் அறைக்குள் செல்ல முயன்ற திமுக எம்.எல்.ஏ.-க்களை போலீஸார் தடுத்த போது, இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, அந்த இடமே அமளிக் காடாகக் காட்சி அளித்தது. இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் துறையின் (வடக்கு) சட்டம்-ஒழுங்கு கூடுதல் ஆணையாளர் எச்.எம்.ஜெயராம் தலைமையிலான காவல் துறை உயரதிகாரிகள் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடன் சில நிமிஷங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தப் பயனும் ஏற்படவில்லை. திமுக எம்.எல்.ஏ.-க்கள் முதல்வர் அறைக்குள் சென்று அவரைச் சந்தித்தே ஆக வேண்டுமென பிடிவாதம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக தூக்கி தலைமைச் செயலகத்தின் 10-ஆம் எண் நுழைவு வாயில் அருகே கொண்டு வந்து விட்டனர்.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் தலைமைச் செயலக வளாகத்தில் அமர்ந்து முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சுமார் 15 நிமிஷங்களுக்கும் மேலாக அவர்கள் கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
ராஜாஜி சாலையில்... தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ.-க்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, தலைமைச் செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால், ராஜாஜி, காமராஜர் சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தலைமைச் செயலக வளாகத்தில் தர்னாவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த திமுகவினருடன், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ.-க்களும் இணைந்து கொண்டனர். இதனால், அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாகக் காட்சி அளித்தது.
எம்.எல்.ஏ.-க்கள் கைது: சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.-க்கள் அனைவரும் காவல் துறையின் வேனில் ஏற்றப்பட்டனர். இதே போன்று, மறியலில் ஈடுபட்ட திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மாநகர பேருந்தில் ஏற்றப்பட்டு ராயபுரத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மாலையில் விடுவிப்பு: நண்பகலில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் அந்தக் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் மாலை 5.30 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com