பழக் கண்காட்சிக்குத் தயாராகி வரும் குன்னூர் சிம்ஸ் பூங்கா

கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக, இயற்கை எழில் சூழ்ந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60ஆவது பழக் கண்காட்சி வரும் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுவதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்
மருத்துவ குணம் மிக்க  மங்குஸ்தான் பழங்கள்.
மருத்துவ குணம் மிக்க  மங்குஸ்தான் பழங்கள்.

கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியாக, இயற்கை எழில் சூழ்ந்துள்ள குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60ஆவது பழக் கண்காட்சி வரும் சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுவதையொட்டி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 285 தாவரவியல் குடும்பங்களைச் சேர்ந்த 1,200 தாவர வகைகள் உள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகின்றன. இங்கு அரிய வகை மரங்களான கேம்பர், காகித மரம், பென்சில் உட், யானைக்கால் மரம், ஸ்ட்ராபெரி, டர்பன்டைன் மரங்கள் உள்ளன.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், ருத்ராட்ச மரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இமயமலை, நேபாளம் போன்ற மலைப் பிரதேசங்களில் காணப்படும் இந்த வகை ருத்ராட்ச மரங்கள் சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
சிறப்புமிக்க இந்தப் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பழக் கண்காட்சியைக் கண்டுகளிக்க ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்பதால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை சிம்ஸ் பூங்கா நிர்வாகம் செய்து வருகிறது. 
பழக் கண்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும்விதமாக பூங்காவின் முகப்பில் பழங்களால் ஆன பல்வேறு உருவ மாதிரிகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் பழக் கண்காட்சியில் அரிய வகை லூஸ் பேரி, மருத்துவ குணம் மிக்க மங்குஸ்தான் பழங்கள், துரியன் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் இடம்பெற உள்ளன. 
சிறந்த பழ உருவங்கள் மற்றும் அரிய வகைப் பழங்களைச் சேகரித்து காட்சிப்படுத்தும் போட்டியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com