தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்புகிறது: 50 சதவீத கடைகள் திறப்பு; பலத்த பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டதாலும், போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டதாலும் இயல்புநிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
தூத்துக்குடி நகரில் வெள்ளிக்கிழமை திறந்திருந்த காய்கனி மார்க்கெட்.
தூத்துக்குடி நகரில் வெள்ளிக்கிழமை திறந்திருந்த காய்கனி மார்க்கெட்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டதாலும், போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டதாலும் இயல்புநிலை திரும்பத் தொடங்கியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் வன்முறையாக மாறியதோடு, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு 13 பேர் பலியாகினர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொடர்ந்து இரு நாள்களாக நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரையும், காவல் கண்காணிப்பாளரையும் இடமாற்றம் செய்த தமிழக அரசு, இயல்புநிலை திரும்ப ஆலோசனைகளை வழங்க கண்காணிப்பு அலுவலர்களையும் நியமித்துள்ளது. அவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகர பகுதியில் வெள்ளிக்கிழமை பல கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு விநியோகம் செய்ததால் நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு தட்டுப்பாடில்லாத சூழல் ஏற்பட்டது. இதுதவிர மருந்துக் கடைகள், டீக்கடைகள், பலசரக்கு கடைகளும் ஆங்காங்கே திறந்திருந்ததால் மக்கள் வீடுகளுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றனர். சாலைகளில் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களில் மக்கள் செல்வதைக் காண முடிந்தது. காமராஜர் காய்கறி சந்தையில் காய்கறிகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.
தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி, திருச்செந்தூர், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. காலையில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், பிற்பகலுக்கு பின்னர் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. தூத்துக்குடியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டதாகவும், நகரப் பேருந்துகள் இயக்கம் விரைவில் சீராகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திரேஸ்புரம், அண்ணா நகர், பிரையண்ட் நகர், சிதம்பர நகர், போல்பேட்டை, தாமோதர நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆளில்லா விமானங்கள் மூலமும் வெளியாள்கள் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் இயல்புநிலை இன்னும் சில நாள்களில் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
50 சதவீத கடைகள் திறப்பு: ஆட்சியர் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை 50 சதவீத கடைகள் திறக்கப்பட்டிருந்ததாகவும், வீடுகளுக்கே சென்று பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
பால் விநியோகம்: பழைய மார்க்கெட் அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை 1,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 13 ஆயிரம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, நடமாடும் ஆவின் பாலகங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் தேவைப்படும் பொதுமக்கள் ஆவின் கட்டுப்பாட்டு மையத்தை 94426 22232 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டால் அவரவர் வீட்டுக்கே சென்று பால் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்துக்கு சென்ற அவர், தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி மற்றும் மதுரைக்கு இயக்கப்படும் பேருந்துகளை பார்வையிட்டு பயணிகளுடன் கலந்துரையாடினார். மதியத்துக்கு மேல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
பொதுமக்கள் ஏதும் புகார் தெரிவிக்க விரும்பினால் 94864 54714 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், 0461-2340101 என்ற தொலைபேசி எண்ணிலும், 1077 கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.


மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை
தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக, மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது. 
மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழக அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. 
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம், கலவரமாக மாறியது ஏன்? போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் அந்த அறிக்கை விரிவானதாக இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com