நாளை ஆழித்தேரோட்டம்: விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

திருவாரூரில் ஆழித்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 27) நடைபெற உள்ளதையொட்டி, நகர்ப் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரமாண்டத் தேரை இணைக்கவிருக்கும் பிரமாண்ட வடக்கயிறுகள்.
பிரமாண்டத் தேரை இணைக்கவிருக்கும் பிரமாண்ட வடக்கயிறுகள்.

திருவாரூரில் ஆழித்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மே 27) நடைபெற உள்ளதையொட்டி, நகர்ப் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.
சைவ சமயத்துக்கு தலைமை பீடமாக விளங்குவது, பஞ்சபூத தலங்களுள் பூமிக்குரிய தலமாக விளங்குவது, சப்த விடங்கர் தலங்களுள் முதன்மையானது என பல்வேறு சிறப்புகளை உடையது திருவாரூர் தியாகராஜர் கோயில். இக்கோயிலின் பங்குனி உத்திர விழாவின்போது ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆழித் தேரோட்டத்தைக் காண திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இங்கு வந்து தங்கியிருந்ததாக உள்ள குறிப்புகளின் மூலம் 7 -ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தேர்த் திருவிழா நடைபெற்றது என்பதை அறிய முடிகிறது. இந்த ஆழித் தேரோட்டத்தில் தனது பரிவாரங்களுடன் தியாகராஜ சுவாமி எழுந்தருளி பவனி வருவதைக் காண இந்திரன் முதலானோர் வருவதாக ஐதீகம்.
நிகழாண்டு ஆழித் தேருக்காக மார்ச் 4 -இல் கொடியேற்றம் நடைபெற்றது. இதையடுத்து தேரோட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்றன.
அலங்கரிக்கப்பட்ட தேரானது, 96 அடி உயரத்தையும், 350 டன் எடையையும் கொண்டது. இருபத்து நான்கரை அடி நீளம், ஒன்றரை அடி உயரம் உடைய 4 இரும்பு அச்சுகளில், 9 அடி விட்டம், ஒன்றரை அடி அகலம் கொண்ட 4 இரும்பு சக்கரங்களின் மேல் அலங்கரிக்கப்படாத தேர் அமைந்துள்ளது. இதில் 3 நிலைகளில் பல்வேறு புராண சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. எண்கோண வடிவில் அமைந்துள்ள திருவாரூர் தேர் 20 பட்டைகளாக காணப்படும்.
இந்த அலங்கரிக்கப்படாத தேரின் மீது, மூங்கில்கள், பனஞ்சப்பைகள் உள்ளிட்ட மரங்களை பயன்படுத்தி, விமானப்பகுதி, கலசம் ஆகிய கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. பின்னர், அலங்காரத்துணிகள் போர்த்துதல், ரிஷபக் கொடி பறக்க விடுதல், தொம்பைத் துணிகள் தொங்கவிடுதல் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்தன.
அலங்காரப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மே 20 -ஆம் தேதி தேவாசிரியன் மண்டபத்திலிருந்த தியாகராஜர், அஜபா நடனத்துடன் ஆழித்தேருக்கு எழுந்தருளினார். அங்கிருந்தபடியே தினசரி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பக்தர்கள் தேரில் ஏறி அவரை தரிசித்துச் செல்கின்றனர். இதற்கென பொது தரிசன வழி, கட்டணத்துடன் கூடிய சிறப்பு தரிசன வழி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தியாகராஜ சுவாமி தேருக்கு வந்தது முதல் வெடிகுண்டு பிரிவு போலீஸார் பணியில் இருந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது வடம் இணைக்கும் பணி, ஹைட்ராலிக் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேரை இழுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்படும் 4 குதிரைகள் அமைப்பு வெள்ளிக்கிழமை (மே 25) இரவு இணைக்கப்பட உள்ளது.
இதையடுத்து முழு வடிவத்துக்கு வரும் தேரானது, ஞாயிற்றுக்கிழமை காலை வடம்பிடிக்கப்பட்டு, திருவாரூர் வீதிகளில் வலம் வர உள்ளது. இதைத்தொடர்ந்து, அம்பாள் தேர், சண்டிகேசுவரர் தேரும் வீதியுலாவுக்கு வரும். முன்னதாக, அன்று அதிகாலையில் சுப்பிரமணியர் தேர், விநாயகர் தேர் ஆகியவை வடம் பிடிக்கப்பட்டு வீதியுலாவுக்குச் செல்லும்.
ஆழித் தேரோட்டத்தைக்காண, திருவாரூருக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. தங்கும் விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மாலையில் தியாகராஜருக்கு நடக்கும் பூஜையைக் காண ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கியுள்ளனர். ஆழித் தேரோட்டத்தையொட்டி, திருவாரூர் நகர்ப் பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com