ரூ.824 கோடி மோசடி: கனிஷ்க் நிறுவன உரிமையாளர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.824 கோடி மோசடி செய்த வழக்கில், கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமாரை அமலாக்கத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.824 கோடி மோசடி செய்த வழக்கில், கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமாரை அமலாக்கத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையைச் சேர்ந்தவர் பூபேஷ்குமார் ஜெயின். இவர் மனைவி நீட்டா ஜெயின். இவர்கள் சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் கனிஷ்க் என்ற பெயரில் தங்கம், வைரம், வைடூரியம், பிளாட்டினம் போன்றவற்றின் நகைகளை தயாரித்து, விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தினர்.
இந்த நிறுவனம் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்கு நகைகளைத் தயார் செய்து விற்று வந்தது. மேலும், இந்த நிறுவனம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கடையும் வைத்திருந்தது. இதற்காக இந்த நிறுவனம் வெளிநாடுகளில் தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த நகைகளை இறக்குமதியும் செய்தது.
இதற்கிடையே இந்த நிறுவனம், நகை இருப்பை அதிகம் காட்டியும், போலியான ஆண்டு நிதி அறிக்கை தயாரித்து அதிக லாபம் காட்டியும் தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் என மொத்தம் 14 வங்கிகளில் ரூ.824.15 கோடி கடன் பெற்றிருக்கின்றனர். இந்த கடனுக்காக செலுத்தப்பட வேண்டிய வட்டித்தொகையையும், நிலுவைத் தொகையையும் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செலுத்தவில்லை.
இதனால் கனிஷ்க் நிறுவனம் அளித்த ஆவணங்களை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவை அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்புப் பிரிவில் அண்மையில் புகார் செய்தார்.
சி.பி.ஐ. வழக்கு: அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த சிபிஐ அதிகாரிகள், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் பூபேஷ்குமார் ஜெயின், நீட்டா ஜெயின், பங்குதாரர்கள் தேஜ்ராஜ் அச்சா, அஜய்குமார் ஜெயின், சுமித் கேதியா ஆகியோர் மீது கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் பூபேஷ்குமாரின் நுங்கம்பாக்கம் வீடு, தியாகராயநகரில் உள்ள அவரது அலுவலகம், கடைகள், நகைப்பட்டறை ஆகிய இடங்களில் சோதனை செய்தனர். இச் சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்தன. இதற்கிடையே பூபேஷ்குமார், நீட்டா ஜெயின் ஆகிய இருவரிடமும் சிபிஐ அதிகாரிகளும், அமலாக்கத்துறையும் பல கட்டங்களாக விசாரணை செய்தனர்.
அமலாக்கத்துறை வழக்கு: வழக்கின் விசாரணையில் கனிஷ்க் நிறுவனம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிஷ்க் நிறுவனம், அதன் இயக்குநர்கள் பூபேஷ்குமார், அவரது மனை நீட்டா ஜெயின், பங்குத்தாரர்கள் உள்பட 6 பேர் மீது மார்ச் மாதம் 23ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.
இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புக்கத்துறையில் உள்ள ரூ.48 கோடி மதிப்புள்ள நகை தொழிலகத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் அந்த நிறுவனம், ஒரு வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருந்த ரூ.143 கோடி முடக்கப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை இது வரை கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான மொத்தம் ரூ.191 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியிருப்பது குறிப்பிடதக்கது.
உரிமையாளர் கைது: இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு பூபேஷ்குமாருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. அந்த அழைப்பாணையை ஏற்று, பூபேஷ்குமார், சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
அவரிடம் அமலாக்கத்துறையினர் பல கட்டங்களாக விசாரணை செய்தனர். விசாரணையின் முடிவில், பூபேஷ்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பூபேஷ்குமார் உடனடியாக, எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதித்துறை நடுவர், ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து பூபேஷ்குமார், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com