ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அத்துறையின்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டனர். அப்போது, கலவரம் ஏற்பட்டதால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மறுதினமும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்நிலையில், உலக சுற்றுச் சூழல் தின நிகழ்வுகள் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில், 'நான் வெளியூரில் இருந்து வெள்ளிக்கிழமை காலையில்தான் திரும்பினேன். தூத்துக்குடி சம்பவம் குறித்து செய்தித்தாள்களில் படித்தேன். இந்த விவகாரம் குறித்து நிச்சயம் கவனத்தில் கொள்வோம். 
ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை முந்தைய அரசுதான் அளித்தது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இந்த விவகாரத்தை ஒரு பிரச்னையாக உருவாக்க விரும்பவில்லை' என்றார்.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகும் இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, அவர் கூறுகையில், 'தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்' என்றார்.
இதுதொடர்பாக சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், 'ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை அளிக்குமாறு அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கேட்டுள்ளார். ஆலைக்கான ஆரம்ப கட்ட அனுமதி, விரிவாக்கத்திற்கான அனுமதி ஆகிய விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடமும் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது' என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com