சுங்கச் சாவடியைச் சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகன் கைது 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
சுங்கச் சாவடியைச் சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகன் கைது 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளை மூட வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியில் தி.வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கடந்த ஏப்.1-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது.
 இதுதொடர்பாக, தி.வேல்முருகன் உள்ளிட்ட 14 பேர் மீது போலீஸாôர் வழக்குப் பதிவு செய்தனர். இதில், 11 பேரை உளுந்தூர்பேட்டை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தி.வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரைத் தேடி வந்தனர்.
 தூத்துக்குடியில் கைது: இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை கலவரச் சம்பவங்களைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவை மீறி வெள்ளிக்கிழமை அங்கு சென்ற தி.வேல்முருகனை அப்பகுதி போலீஸார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். பின்னர், சனிக்கிழமை அதிகாலை தி.வேல்முருகன் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, அங்கு தயார் நிலையில் இருந்த விழுப்புரம் மாவட்ட போலீஸார் சுங்கச் சாவடியை சேதப்படுத்திய வழக்கில் தி.வேல்முருகனைக் கைது செய்தனர்.
 அங்கிருந்து காரில் அழைத்து வரப்பட்ட தி.வேல்முருகன், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மாவதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
 புழல் சிறையில் அடைப்பு: இதையடுத்து, வேல்முருகனை காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீஸார், சென்னை புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக, வேல்முருகனை போலீஸார் அழைத்து வரும்போது, விழுப்புரம் அருகே மடப்பட்டு உள்ளிட்ட இடங்களில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி. ராஜேந்திரன் தலைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com