பரிகாரப் பூஜைகளுடன் சமயபுரம் கோயில் நடைதிறப்பு: மசினிக்கு 4 நாள் ஓய்வு

யானை மிதித்து பாகன் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை பரிகாரப் பூஜைகள் முடித்து நடை மீண்டும் திறக்கப்பட்டது.
பரிகாரப் பூஜைகளுடன் சமயபுரம் கோயில் நடைதிறப்பு: மசினிக்கு 4 நாள் ஓய்வு

யானை மிதித்து பாகன் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சனிக்கிழமை பரிகாரப் பூஜைகள் முடித்து நடை மீண்டும் திறக்கப்பட்டது. மேலும், கோயில் யானை மசினிக்கு 4 நாள் ஓய்வு அளித்து தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
 திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்த கோயில் யானை மசினி, திடீரென மிரண்டு அருகிலிருந்த பாகனை மிதித்துக் கொன்றது. இதையடுத்து, கோயிலில் இருந்த பக்தர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நடை சாத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாகாளிகுடியில் உள்ள யானை நிறுத்தும் பகுதிக்கு யானை மசினி அழைத்துச் செல்லப்பட்டது.
 மீண்டும் நடை திறப்பு: பாகன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோயிலில் சனிக்கிழமை காலை பரிகாரப் பூஜைகள் நடைபெற்றன. முன்னதாக, நள்ளிரவில் கோயில் வளாகம் முழுவதும் தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தப்பட்டு, பஞ்ச கவ்யம் தெளிக்கப்பட்டது. சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் குருக்கள் முன்னின்று பூஜைகளை தொடங்கினார். பாகன் உயிரிழந்த இடத்தில் பரிகார பூஜை நடத்தப்பட்டதுடன், கோயில் வளாகத்தில் வாஸ்து, விக்னேஸ்வர, அம்மனுக்கு சாந்தி பூஜை ஆகியவை நடைபெற்றன. தொடர்ச்சியாக, கோயிலுக்கு வெளியே 4 மூலைகளிலும், எட்டு திசைகளிலும் பலி பூஜை நடைபெற்றது. பிரவேச பலி, புண்ணியஹாசனம், ஹஸ்திர ஹோமம் என 8 மணி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதன் பிறகு கோயில் நடை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு வழக்கம்போல தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
 சகஜ நிலை திரும்பியது: கோயில் வரலாற்றிலேயே முதன்முறையாக நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜையுடன் திறந்திருந்தாலும் சனிக்கிழமை சகஜ நிலையை காண முடிந்தது. வழக்கம்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
 மசினிக்கு ஓய்வு: மாகாளிகுடியில் உள்ள உஜ்ஜயினி ஓம் காளியம்மன் கோயில் வளாகத்தில் யானையின் ஓய்விடத்தில் மசினி உள்ளது. கோவையிலிருந்து வந்துள்ள மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் 3 மணி நேரத்துக்கு ஒருமுறை யானையைப் பார்வையிட்டு அதற்கேற்ப உணவுகளை வழங்கி வருகின்றனர். தொடர்ந்து, 4 நாள்களுக்கு இதே நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மசினி அருகே யாரும் செல்லாத வகையில் பாகன்கள், கோயில் பணியாளர்கள் இரவு, பகலாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com