பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சி: தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியின் துயரங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சி: தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியின் துயரங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
 மத்திய பாஜகவின் 4 ஆண்டு காலம் ஆட்சி முடிந்துள்ள நிலையில், சென்னை சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளர் சின்னாரெட்டி, சு.திருநாவுக்கரசர் ஆகியோர் இணைந்து சனிக்கிழமை அளித்த பேட்டி: மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி, கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்கள் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம் என்று மோடி கூறினார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என்றார். இது எதையும் நிறைவேற்றவில்லை.
 பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என்பதே இருக்காது என்றார். ஆனால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 18 சதவீத குழந்தைகள் சரிவிகித உணவு கிடைக்காமல் உடல் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்று உலக உணவு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
 பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரில் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தி பதுக்கலுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் தலை விரித்தாடுகிறது.
 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மதிக்கப்படவில்லை. பாஜக இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் இரட்டை ஆட்சி முறை நடத்தப்படுகிறது. இதுபோன்ற மோசமான ஆட்சியை மக்கள் பார்த்ததே இல்லை.
 மோடி அலை ஓய்ந்து விட்டது. ராகுல் அலைதான் வீசி வருகிறது. மதவாதம், பயங்கரவாதத்தை எதிர்க்கும் சக்திகள் ஒன்றாகச் சேர்ந்து ராகுலை விரைவில் பிரதமராக்குவர். பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிரதமர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தமிழக முதல்வரோ தூத்துக்குடி சம்பவத்தைப் பத்திரிகைகள் மூலம் பார்த்து தெரிந்து கொண்டதாகக் கூறுகிறார்.
 உடனடியாக அமைச்சர்கள் குழுவைத் தூத்துக்குடி அனுப்பி மக்களுக்கு ஆறுதல் கூறி, குறைகளைக் கேட்டறிய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com