போச்சம்பள்ளி அருகே ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட கல்வெட்டு கண்டெடுப்பு

போச்சம்பள்ளியை அடுத்த ஐகொத்தப்பள்ளி கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள விவசாய நிலத்தில் ஒன்பதாம்
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட கல்வெட்டு.
ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னட கல்வெட்டு.

போச்சம்பள்ளியை அடுத்த ஐகொத்தப்பள்ளி கிராமத்தில் செல்லியம்மன் கோயில் அருகே உள்ள விவசாய நிலத்தில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நுளம்ப மன்னன் முதலாம் மகேந்திரனின் கன்னட தூண் கல்வெட்டை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், முனைவர் பட்ட மாணவர்கள் மஞ்சுநாத், கார்த்திக் பாலாஜி, செல்வமணி மற்றும் வரலாற்று ஆர்வலர் தகடூர் பார்த்திபன் ஆகியோர் கள ஆய்வின்போது கண்டெடுத்தனர்.

இக் கல்வெட்டு குறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறுகையில்: நுளம்பர் என்னும் அரசு மரபினர் கி.பி. 8 -ஆம் நூற்றாண்டு முதல் 11 - ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகம், ஆந்திரம் மற்றும் ஒசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்து வந்தனர். அப்போது கி.பி.875 முதல் கி.பி.897 வரை ஆட்சி செய்த நுளம்ப மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் காலத்தில் எயில்நாடு என்ற பகுதி கங்க ரங்கமா என்ற மகேந்திரனின் ஆளுநரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அப்போது ரங்கமா மற்றும் பென்னைய்யா என்பவர்கள் அந்துண்டா என்ற இடத்தில் அமைந்துள்ள ராமதான என்ற கோயிலுக்கு நிலத்தைத் தேவபோகமா (கடவுளுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலம்) தானம் செய்து அந் நிலத்தின் எல்லைகளைக் குறித்துள்ளனர். இந் நிலம் காளியண்ணா, மாரம்மா மற்றும் சிலரால் விவசாயம் செய்யப்பட்ட நிலம் என்ற குறிப்பும் இடம்பெற்றுள்ளது. மேலும், இக் கல்வெட்டில் தகடூரில் (இன்றைய தருமபுரி) உள்ள கடவுள் மகேசுவரர் பெயரும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் உள்ள சில எழுத்துகள் பிற்காலத்தில் பொறிக்கப்பட்டவையாகும். இதில் சாபமிடும் சொற்கள் (வரிகள்) மட்டும் சம்ஸ்கிருத மொழியில் உள்ளன.

இங்கு எயில்நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ள இடமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கங்காவரம், காத்தாடிக்குப்பம் மற்றும் பெண்ணேசுவரமடம் ஆகிய பகுதிகளைக் கொண்ட பண்டைய நாட்டு பிரிவாகும்.

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகடூர் மகேசுவரர் தருமபுரி நகரில் உள்ள அரிகரநாதர் என்று அழைக்கப்படும் சிவன் கோயிலில் குடிக் கொண்டுள்ள இறைவனைக் குறிப்பதாக கருதலாம் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com