தமிழ்நாடு விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உத்தரப்பிரதேச இளைஞர் கைது

தமிழ்நாடு விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, உத்தரப்பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டார்.


தமிழ்நாடு விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக, உத்தரப்பிரதேச இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் சென்ட்ரலில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலகத்துக்கு நள்ளிரவு 1 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர், தமிழ்நாடு விரைவு ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார். இதைக் கேட்ட காவலர்கள், உடனே தெற்கு ரயில்வேயின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
அவர்கள், உடனே தமிழ்நாடு விரைவு ரயிலில் வெடிகுண்டு சோதனை நடத்த உத்தரவிட்டனர். இதன்படி, அப்போது ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளி மண்டலம் கிருஷ்ணா கால்வாய் அருகே சென்று கொண்டிருந்த தமிழ்நாடு விரைவு ரயில், நடுவழியில் நிறுத்தப்பட்டது. அங்கு ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 200 காவலர்கள் மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில் அந்த ரயிலில் இருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் அந்த அழைப்பு வதந்தியைப் பரப்பும் நோக்கத்தோடு வந்திருப்பது தெரியவந்தது.
இதன் விளைவாக அந்த ரயில் அங்கிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினர், சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சைபர் குற்றப்பிரிவு போலீஸார் உதவியுடன் விசாரணை செய்தனர்.
உத்தரப்பிரதேச இளைஞர் கைது: விசாரணையில், சென்னை பெரியமேடு மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து, நடைபாதையில் பெல்ட் வியாபாரம் செய்து வரும் உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா மாவட்டம் ஷரன்ஜி ஜெலசர் பகுதியைச் சேர்ந்த சு.இம்ரான்கான் (24) என்பவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் இம்ரான்கானை புதன்கிழமை கைது செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் மதுபோதையில் இம்ரான்கான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com