அரசுப் பணியாளர் தேர்வுக்கான கேள்விகள் தமிழிலேயே இருக்க வேண்டும்: ராமதாஸ்

அரசுப் பணியாளர் தேர்வுக்கான கேள்விகள் தமிழிலேயே கேட்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசுப் பணியாளர் தேர்வுக்கான கேள்விகள் தமிழிலேயே இருக்க வேண்டும்: ராமதாஸ்


அரசுப் பணியாளர் தேர்வுக்கான கேள்விகள் தமிழிலேயே கேட்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழில் வினாத்தாள்கள் தயாரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்ட அறிக்கையில் நவம்பர் 11-இல் நடைபெறும் இரண்டாம் தொகுதி முதனிலைத் தேர்வுகள் மற்றும் பின்னர் நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வுகள் ஆகியவற்றுக்கான வினாத்தாள்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 
தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆகும். ஆனால், இன்னமும் சில பாடங்களுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டும் தான் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் உறுதி செய்துள்ளது. 
அரசியல் அறிவியலும், சமூகவியலும் ஆங்கில வழியில் மட்டுமே கற்பிக்கப்படும் பாடங்கள் அல்ல. சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும், ஏராளமான கல்லூரிகளிலும் இந்த இரு பாடங்களும் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகின்றன. நேரடி வகுப்புகளில் மட்டும் தொலைநிலைக் கல்வி முறையிலும் இந்த பாடங்கள் தமிழ் வழியில் கற்பிக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அந்தப் பாடங்களுக்கான வினாக்கள் ஆங்கிலத்தில் மட்டும் கேட்கப்படும் என்பது எந்த வகையில் நியாயம்? இது தமிழுக்கு இழைக்கப்படும் துரோகம் அல்லவா?
இவற்றுக்கெல்லாம் மேலாக தமிழ்நாடு அரசுப் பணிக்கு நடத்தப்படும் எந்தப் போட்டித் தேர்வுகளாக இருந்தாலும் அவை கண்டிப்பாக தமிழில் நடத்தப்பட வேண்டும். தமிழில் தேர்வு நடத்துவதற்கு ஏதேனும் முட்டுக்கட்டைகள் இருந்தால் அவை உடனடியாக களையப்பட வேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசுக்கு கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உண்டு.
அதைச் செய்யாமல் தமிழுக்கு துரோகம் இழைப்பதையும், அந்த உண்மைகளை சுட்டிக்காட்டினால் அதை அவதூறு என்று பழி போடுவதையும் தமிழ் உணர்வாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com