தொலைநிலை படிப்புகளை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்த முடியுமா?: 2.52 அளவுக்கு குறைந்தது நாக் புள்ளிகள்

அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட நாக் புள்ளிகள் குறைந்திருப்பதால், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்த முடியுமா
தொலைநிலை படிப்புகளை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்த முடியுமா?: 2.52 அளவுக்கு குறைந்தது நாக் புள்ளிகள்


அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட நாக் புள்ளிகள் குறைந்திருப்பதால், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால், அப் பல்கலைக்கழகம் சார்பில் வழங்கப்படும் தொலைநிலைப் படிப்புகள் அங்கீகரிக்கப்படுமா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர் பேராசிரியர்கள்.
புதிய விதிகள்: நாடு முழுவதும் உள்ள தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் கட்டுப்பாடு யுஜிசி வசம் வந்ததைத் தொடர்ந்து, திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்விக்கான புதிய வழிகாட்டுதலை (தொலைநிலைக் கல்வி வழிகாட்டி-2017) 2017 ஜூன் மாதம் யுஜிசி வெளியிட்டது. அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கு அனுமதியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை யுஜிசி வரவேற்றது. அந்த அறிவிப்பின்போது, தொலைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 3.26 நாக் புள்ளிகள் பெற்றிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே, தொலைநிலைக் கல்வி நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என்ற புதிய நிபந்தனையையும் யுஜிசி வெளியிட்டது.
இதன் காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகிய 3 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைப் படிப்புகளை வழங்கும் தகுதியை பெற்றன.
யுஜிசி புதிய அங்கீகாரம்: பின்னர், செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய 5 பல்கலைக்கழகங்களின் தொலைநிலைப் படிப்புகளுக்கும் யுஜிசி அங்கீகாரம் அளித்தது. நாக் புள்ளிகள் 3.26 அளவுக்கும் குறைவாக பெற்ற தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களுக்கு தொலைநிலைப் படிப்புகள் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. 
குறைந்தது நாக் புள்ளிகள்: இந்த நிலையில், நவம்பர் 2 ஆம் தேதி நாக் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் 2.52 புள்ளிகளை மட்டுமே (பி-பிளஸ்) பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கூறுகையில், நாக் புள்ளிகள் 3.26 அளவுக்கு குறைவாக உள்ள பல்கலைக்கழகங்கள் எதற்கும், தொலைநிலைப் படிப்புகளை நடத்த யுஜிசி அனுமதிக்கவில்லை. இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் யுஜிசி பிறப்பித்த அறிவிப்பில், தமிழ் பல்கலைக்கழகமும் தொலைநிலைப் படிப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்போது பல்கலைக்கழகத்துக்கு 2.52 அளவிலேயே நாக் புள்ளிகள் கிடைத்துள்ளன. இதனால், தொலைநிலைப் படிப்புகளுக்கான அனுமதி திரும்பப் பெறப்படும் சூழல் எழுந்துள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் சேர்க்கை பெற்ற மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.
இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.பாலசுப்பிரமணியன் கூறியது: யுஜிசி கடந்த செப்டம்பரில் அளித்த அனுமதியில் வரும் 2020-ஆம் ஆண்டு வரை தொலைநிலைப் படிப்புகளை நடத்திக்கொள்ள பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித பாதிப்பும் இருக்காது. பல்கலைக்கழகத்துக்கு நாக் புள்ளிகள் இப்போது குறைந்திருப்பதால், 2020 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் அனுமதி மறுக்க வாய்ப்புள்ளது. எனவே, தொலைநிலைப் படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை.
மேலும், தமிழ் பல்கலைக்கழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், தொலைநிலைப் படிப்புகள் மூலம்தான் வருவாய் கிடைக்கிறது. அரசு சார்பில் மிகக் குறைந்த நிதிதான் வழங்கப்படுகிறது.
எனவே, பல்கலைக்கழகங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, யுஜிசி விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இந்தப் புதிய விதிமுறை காரணமாக தமிழகம் உள்பட நாடு முழுவதிலும் 70 சதவீத பல்கலைக்கழகங்கள் தொலைநிலைப் படிப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com