பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை திமுகவினர் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

பருவமழைக் காலம் முடியும் வரை அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு திமுகவினர் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி, தானும் அருந்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி, தானும் அருந்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


பருவமழைக் காலம் முடியும் வரை அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு திமுகவினர் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும் என்று அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் பலியாகி வருவது மிகுந்த வேதனையை அளிக்கிறது. பருவநிலை மாற்றத்தையும் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனத்தில் கொள்ளாமல் ஆட்சியாளர்கள் காட்டிய அலட்சியத்தின் விளைவாக உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
மக்கள் நலனின் இந்த அரசுக்கு அக்கறை இருக்குமானால் தமிழகத்தை உடனடியாக மருத்துவ நெருக்கடி நிலை மாநிலமாக அறிவித்து உரிய மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் அதிமுக ஆட்சியினர் கவனம் செலுத்தவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இல்லாவிட்டாலும் திமுக தன்னால் இயன்ற அளவில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
மருத்துவ முகாம்கள்: திமுகமருத்துவர் அணி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிலவேம்புக் கசாயம் வழங்கும் நிகழ்வை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தேன். டெங்கு காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சலுக்கு நிலவேம்புக் கசாயம் ஒரு தடுப்பு மருந்தாக இருக்கும் என்ற அடிப்படையில், திமுக ஆட்சி நடைபெற்ற காலத்திலேயே சென்னை மாநகராட்சியில் இது வழங்கப்பட்டது.
தொடர்ந்து பல முறையும் திமுகவின் சார்பில் நிலவேம்புக் கசாயம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிலவேம்புக் கசாயம் வழங்கும் பணி பருவமழைக் காலம் முடியும் வரையிலும், காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களின் உற்பத்தி மட்டுப்படும் வரையிலும் தொடர்ந்திட வசதி செய்யப்பட்டுள்ளது. 
இதே போன்று திமுகவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் நிலவேம்புக் கசாயம் தொடர்ந்து வழங்கி, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கட்சியினர் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com