திருச்செந்தூரிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வரை செல்ல நீராவி ரயில் தயார்: கட்டணம் ரூ.500

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு நீராவி ரயில் என்ஜின் வெள்ளிக்கிழமை சோதனை முறையில் இயக்கப்பட்டது
திருச்செந்தூரிலிருந்து ஸ்ரீவைகுண்டம் வரை செல்ல நீராவி ரயில் தயார்: கட்டணம் ரூ.500

திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்திற்கு நீராவி ரயில் என்ஜின் வெள்ளிக்கிழமை சோதனை முறையில் இயக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்த ரயில் என்ஜின் மூலம், வரும் 11ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. அதற்கு பயணிகள் ரூ.500 கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மீட்டர்கேஜ் ரயில் பாதையாகவே இருந்து வந்த இந்த ரயில் வழித்தடம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அகலப் பாதையாக மாற்றப்பட்டது.
 திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கொல்லம் ஆகிய பகுதிகளுக்கு நாள்தோறும் பயணிகள் ரயில்களும், திருச்செந்தூரில் இருந்து தினமும் சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
 இந்நிலையில், திருச்செந்தூர்-திருநெல்வேலி ரயில் வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜினை குறிப்பிட்ட நாள்கள் மட்டும் சிறப்பு ரயிலாக இயக்க தெற்கு ரயில்வே முன்வந்துள்ளது.
 இதற்கான சோதனை ஓட்டத்துக்காக கடந்த 1855ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட குளிர்சாதன வசதி கொண்ட பிரத்யேகமான ரயில் பெட்டி புதுச்சேரியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருச்செந்தூருக்கு தனி ரயில் என்ஜின் மூலமாக கொண்டுவரப்பட்டது. இந்த நீராவி ரயில் என்ஜினின் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரை இயக்கப்பட்ட நீராவி ரயில் என்ஜினை பயணிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
 இதையடுத்து, நவ.11ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நீராவி ரயில் திருச்செந்தூரில் இருந்து ஸ்ரீவைகுண்டத்துக்கு பிரத்யேகமாக இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய விரும்புவோர் திருச்செந்தூர் ரயில் நிலைய மேலாளரிடம் ரூ.500 கட்டணம் செலுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த ரயிலில் ஒரே நேரத்தில் சுமார் 40 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் அதற்கேற்ப நீராவி ரயில் குறிப்பிட்ட நேரங்களில் இதே வழித்தடத்தில் நவ.11ஆம் தேதி மட்டும் இயக்கப்படுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com