குரூப்-2 தேர்வு: 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.
குரூப்-2 தேர்வு: 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர்.

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,199 பணியிடங்களுக்கான  காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு இன்று மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு நடைபெற்றது.

இதில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் தேர்வை எழுதினர். இதில் பெண்கள் 3 லட்சத்து 54 ஆயிரத்து 245 பேரும், ஆண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வினை தமிழ் வழியில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேரும், ஆங்கில வழியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேரும் எழுதினர். மாற்று திறனாளிகளுக்கு உதவுவதற்காக 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். 

முதல் நிலைத் தேர்வுக்கான விடைகள் அனைத்தையும் தேர்வு நடந்து முடிந்த ஒரு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு நடைபெறும் மையங்களின் வளாகம் முன்பாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு எழுதவுள்ளனர்.

பொது அறிவு மற்றும் அறிவுத்திறன் சார்ந்த கேள்விகள் 150 மதிப்பெண்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து 150 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண் 90 எடுக்க வேண்டும்.

சென்னையில் ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப்பள்ளி, எழும்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி உள்பட 247 மையங்களில் 64 ஆயிரத்து 309 பேர் தேர்வு எழுதினர். 247 மையங்களுக்கு 247 முதன்மை கண்காணிப்பாளர்களும் 3 ஆயிரத்து 230 கண்காணிப்பாளர்களும், தேர்வு நடைபெறும் போது ஆய்வுமேற்கொள்ள 2 ஆயிரத்து 268 ஆய்வாளர்களும், சென்னை மாவட்டத்தில் தேர்வை கண்காணிக்க 254 பறக்கும் படையும் நியமிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பதற்றமான தேர்வு மையங்களாக 11 மையங்கள் கண்டறியப்பட்டு, கூடுதல் கண்காணிப்புடன் தேர்வு நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com