பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 260 பேருக்கு தீவிர சிகிச்சை: சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 260 பேருக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே. குழந்தைசாமி.

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 260 பேருக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார் பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே. குழந்தைசாமி.
 திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரத் துறை, மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள டெங்கு, பன்றிக்காய்ச்சல் தடுப்புப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே. குழந்தைசாமி ஆகியோர் சனிக்கிழமை பார்வையிட்டனர்.
 பிறகு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் கே. குழந்தைசாமி அளித்த பேட்டி:
 தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தாக்கம் குறைந்து வருகிறது. நிகழாண்டு பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல், இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டதும் கவனக்குறைவாக இருக்காமல், உடனடியாக அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதோடு தினமும் பலமுறை கைகளை கழுவுதல் அவசியம். தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் டாமி புளு போன்ற 20 லட்சம் மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
 பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி உள்பட மாநிலத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் காய்ச்சல் முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்படும். பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல், காய்ச்சல் பாதித்தவர்கள் மருந்து உட்கொள்ளக்கூடாது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com