தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு துணை முதல்வர் அழைப்பு

தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டுமென இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்: இஸ்லாமிய நாடுகளுக்கு துணை முதல்வர் அழைப்பு

தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டுமென இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்தார்.
 உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம், ஐக்கிய பொருளாதார மன்றம் சார்பில் "கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதி' குறித்த மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநாட்டு மலரை வெளியிட்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
 நாட்டிலேயே உற்பத்தித் துறையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தமிழகம் வளர்ந்து பொருளாதார வளர்ச்சியில் வலுப்பெற்று நாட்டிலேயே 2-ஆவது பெரிய மாநிலமாக மேம்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் வளர்ச்சி என அனைத்திலும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் தான் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 7,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
 உலக அளவில் அதிக அளவு மின்நிறுவு திறன் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 5-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்காரணமாக தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. மேலும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர், நிலம், மின்சாரம் போன்றவற்றை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மலேசிய நிறுவனங்களுடன் சிறந்த பொருளாதார வர்த்தக உறவை தமிழக அரசு கடைப்பிடித்து வருகிறது. தமிழகத்தில் தொழில் தொடங்க அனைத்து முதலீட்டாளர்களையும் அழைக்கிறோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கும், உங்கள் தொழில் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் முதலீடு செய்ய மலேசியா போன்ற இஸ்லாமிய நாடுகள் முன்வர வேண்டும். இதன்மூலம் 3,300 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீட்டை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.
 தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது: தொழிற்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நாட்டில் சிறப்பாகத் தொழில் தொடங்கும் முதல் மூன்று மாநிலங்களில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது. ஒற்றைச் சாளர முறையில் அனைத்து தொழில்களுக்கும் 30 நாள்களுக்குள் அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோன்று முதலீடு செய்ய வருபவர்கள் அனைவருக்கும் உதவி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது. முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றார்.
 இந்த மாநாட்டில் உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் தலைவர் டூன் மூஸா ஹிதாம், ஐக்கிய பொருளாதார மன்றங்களின் தலைவர் ஆரிஃப் புகாரி ரகுமான், மாநில தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், வீட்டுவசதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com