நவீன மருத்துவ வசதிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் நவீன மருத்துவ வசதிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.
நவீன மருத்துவ வசதிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல் நவீன மருத்துவ வசதிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.
 மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில், சிறந்த மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளுக்கு விருது வழங்கும் விழா, அம்மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநர் பேசியதாவது:
 தேசிய அளவில் தமிழகம்தான் சுகாதாரத் துறையில் முன்னோடி மாநிலமாக உள்ளது. பொது சுகாதாரச் சட்டத்தை அமல்படுத்திய முதல் மாநிலமும் தமிழகம்தான். இம்மாநிலம் ஒரு மருத்துவச் சுற்றுலா மையமாக மாறியுள்ளது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, ஆண்டுக்கு 15 லட்சம் பேர் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்காக தமிழகம் வருகின்றனர். மருத்துவத் துறையில் தனியாரின் பங்களிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 பொதுமக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஆயுஸ்மான் பாரத் என்னும் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது.
 மாறி வரும் வாழ்க்கை முறையால் பல்வேறு புதிய நோய்கள் உருவாகின்றன. எனவே, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பிட்ட நோய்களை ஒழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சிறு நோய்களுக்கும் நிரந்தரத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும். ஊட்டச்சத்து பற்றாக்குறையில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், மாசு அளவைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தவேண்டும். நாட்டின் சுகாதாரத்தை மேலும் மேம்படுத்தவும், நோய்களை முற்றிலும் ஒழித்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொது சுகாதாரம், தனியார் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லாமல், நவீன மருத்துவ வசதிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்றார்.
 இதில், சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த குஜராத் சமீர் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மனீஷ் ஆர். ஷா முதல் பரிசையும், மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் அனில் பட் இரண்டாம் பரிசையும், வேலூர் சிஎம்சி மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் தருண் ஜேகப் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
 தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.கீதாலட்சுமி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், ஜெம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவர் சி. பழனிவேலு, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி டீன் ஆர்.எம். ராஜா முத்தையா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com