புயல் சின்னம்: துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

அந்தமான் கடல் பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடுத்து, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் சனிக்கிழமை முதலாம் எண் புயல் எச்சரிக்கைக்
புயல் சின்னம்: துறைமுகங்களில் முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

அந்தமான் கடல் பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதை அடுத்து, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் சனிக்கிழமை முதலாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
 அந்தமான் கடல் பகுதியில் போர்ட்பிளேயரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 1,340 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூரிலிருந்து 1,390 கி.மீ. தொலைவிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறக்கூடும்.
 இந்தப் புயலானது வடமேற்கு திசையில் 48 மணி நேரம் பயணித்து, பின்னர் மேற்கு தென்மேற்கு திசையில் வட தமிழகம், தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது. நவ.14-ஆம் தேதி சென்னையை நோக்கி நகரும் புயல், 16-ஆம் தேதி காலை புதுச்சேரி அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இதைத் தொடர்ந்து, புயல் உருவாகக் கூடிய திடீர் காற்றுடன் மழையுள்ள வானிலைப் பகுதி ஏற்பட்டுள்ளது என்பதற்கான தூர முன்னறிவிப்பாக கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில் சனிக்கிழமை புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டன.
 புதுச்சேரி, கடலூர்: புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் சனிக்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டதை அடுத்து, கடலூர் மாவட்ட மீனவர்கள் நவ.13, 14 ஆகிய தேதிகளில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என கடலூர் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
 நாகப்பட்டினம், காரைக்கால்: நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
 சனிக்கிழமை பகல் நேரத்தில் நாகை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது வெயில் இருந்தது, ஒரு சில நேரங்களில் மந்தமான வானிலையும் நிலவியது. சனிக்கிழமை காலை முதல் மாலை வரை மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழையில்லை.
 காரைக்கால் மாவட்டத்தில் மழையில்லை எனினும், தொடர்ந்து குளிர் காற்று வீசியது. கடல் சீற்றம் அதிகரித்திருந்தது.
 தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சனிக்கிழமை 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தால், அவர்கள் உடனடியாக கரை திரும்பும்படியும் அதிகாரிகள் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 அதோடு, மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் வகையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டுள்ளது.
 அதேபோன்று, ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் துறைமுகத்திலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com