மு.க.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கு ஏற்ப கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள்: முதல்வர் கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மு.க.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கு ஏற்ப கொள்கையை மாற்றிக் கொள்பவர்கள்: முதல்வர் கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சந்திரபாபு நாயுடுவும் காலத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
 திருப்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலமாக கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளில் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் மக்கள் நலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
 இருபெரும் தலைவர்கள் உருவாக்கிய கட்சியை உடைக்கவேண்டும் என எதிரிகளுடன் சேர்ந்து சதி செய்துகொண்டிருக்கும் டி.டி.வி.தினகரன்தான் அதிமுகவின் முதல் துரோகி. இது மக்களுக்கும், கட்சியினருக்கும் தெரியும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்தான் ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுவித்து வருகிறோம். தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் சிறையில் இருப்பவர்களையும் அந்த அடிப்படையில்தான் விடுவிக்க வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியிருக்கிறோம்.
 இதேபோலத்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க சட்டப் பேரவை கூடி, தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். இந்த விவகாரத்திலும் ஆளுநர்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும்.
 மு.க.ஸ்டாலினும், நாயுடுவும்...: மு.க.ஸ்டாலினும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப மாறக் கூடியவர்கள். பாஜகவுடன் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, அமைச்சரவையிலும் திமுக இடம் பெற்றிருந்தது. அந்த அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முரசொலி மாறன் உடல் நலக் குறைவால் ஓராண்டு வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதிலும் பாஜக அரசு அவரை அமைச்சரவையிலேயே வைத்திருந்தது. அப்போது பாஜக நல்ல கட்சி, நல்ல அரசு என்று பாராட்டிய திமுகவினர், தற்போது பாஜக தீண்டத்தகாத கட்சி, மதவாதக் கட்சி என்கின்றனர். அதேபோலத்தான் கடந்த நான்கரை ஆண்டுகளாக பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சந்திரபாபு நாயுடு தற்போது தேர்தல் வரும் நிலையில் அணி மாறியுள்ளார்.
 இவர்கள் இருவரும் காலத்துக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொள்பவர்கள். இவர்களுக்கு கொள்கைப் பிடிப்பு எதுவும் கிடையாது. ஆனால், அதிமுக எப்போதும் கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் கட்சி. தமிழகத்துக்கான நன்மைகளைப் போராடி, வாதாடி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
 எங்களைப் பொருத்தவரை தமிழகத்துக்கு யார் நன்மை செய்தாலும் அவர்களை ஆதரிப்போம். தமிழகத்தை யார் எதிர்த்தாலும் அவர்களை எதிர்ப்போம். மாநில மக்களின் உரிமைகளைக் காப்பதற்கும், நல்ல திட்டங்களைப் பெறுவதற்கும்தான் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோமே தவிர, அவர்களுடன் கூட்டணியில் இல்லை.
 தடுப்பணைகள்: வட மாவட்ட மக்களின் நீராதாரமாகத் திகழும் பாலாற்றின் குறுக்கே 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆந்திர மாநில அரசு தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. இதனால் பாலாறு வறண்டுவிட்டது. தடுப்பணை விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவையில் மட்டுமே திமுக குரல் எழுப்புகிறது. திமுகவினருக்கு உண்மையிலேயே மனசாட்சி இருந்திருந்தால், தமிழக மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை இருந்தால், அவர்கள் பாதிக்கப்படக் கூடாது எனும் எண்ணமும் இருந்திருந்தால் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்தபோது தடுப்பணைகள் குறித்து கேள்வி எழுப்பியிருக்க வேண்டும்.
 தடுப்பணைகளை அகற்றி விட்டு தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நீரைக் கொடுங்கள் என்று திமுகவினர் ஒரு வார்த்தையாவது கேட்டனரா? அவர்களுக்கு அதிகாரமும், பதவியும்தான் முக்கியம்.
 சர்கார் பட விவகாரம்: சர்கார் பட விவகாரத்தில் அதிமுகவினர் பேனர்களைக் கிழித்ததாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. பொதுமக்களுடன் சேர்ந்து அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பால் சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் கொச்சைப்படுத்தப்படும்போது, அவமானப்படுத்தப்படும்போது தன்மானம் உள்ள எந்த ஒரு கட்சிக்காரரும் கொதித்துத்தான் எழுவார்கள்.
 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் திமுக, இதுவரை எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. சிறப்பான ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் எனும் நோக்கிலேயே வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. திரைத் துறையில் இருந்து கமல்ஹாசன் ஓய்வுபெற்றுவிட்டார். திரைப்படத்திலேயே அவரது நடிப்பை மக்கள் ஏற்கவில்லை. அரசியலிலும் அவருடைய நடிப்பு எடுபடாது. அவரது திரைப்படத்துக்கு ஒரு பிரச்னை வந்தபோது இந்த நாட்டைவிட்டே போகிறேன் என்று கூறியவர், மக்களின் பிரச்னைகளுக்கு என்ன தீர்வைக் கண்டுவிடுவார்?
 விளை நிலங்களில் மின் கோபுரங்கள்: விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாண வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
 இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் அமைச்சர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மின்சாரம் மிகவும் அத்தியாவசியமானது. உயர் அழுத்த மின் கோபுரங்கள் இல்லாமல் மின்சாரத்தைக் கொண்டு செல்லமுடியாது. எனவே, மக்களிடம் பேசி அவர்களுக்குத் தேவையான இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு முயற்சித்து வருகிறது.
 இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலையாகும். இதனால் அந்நாட்டில் உள்ள தமிழர்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 முருகதாஸின் உறவினர்கள்கூட...
 சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லாப் பொருள்களை வாங்கியுள்ளனர். அந்தப் பட்டியல் எங்களிடம் உள்ளது. சில நடிகர்கள் விலையில்லாப் பொருள்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். ஊடகங்கள்தான் இது குறித்து மக்களுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டும்.விலையில்லாத் திட்டங்கள் கொடுப்பதால்தான் தமிழகம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது. குறைந்த கட்டணம் என்பதால்தான் அதிக மாணவர்கள் உயர் கல்வியில் சேருகின்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com