பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழப்பு; 2-ஆவது நாளாக மறியல்: ஆட்சியர் விசாரணை

அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மறியலில் ஈடுபட்டனர்.
பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழப்பு; 2-ஆவது நாளாக மறியல்: ஆட்சியர் விசாரணை

அரூர் அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மறியலில் ஈடுபட்டனர்.
 அரூர் வட்டம், சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
 இது தொடர்பாக, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
 இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்யவும், மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆட்சியர் விசாரணை: சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக்காரர்களை சமரசம் செய்த மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, மாணவியின் பிரேதப் பரிசோதனைகளை விடியோ பதிவுடன், சிறப்பு மருத்துவர் குழுவினர் உடற்கூறு ஆய்வு செய்யவும், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் விசாரணை நடத்தவும் பரிந்துரை செய்யப்படும் என உறுதியளித்தார்.
 மேலும், இச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யவும், புகார் மனுவை பெறாமல் அலைகழித்த கோட்டப்பட்டி போலீஸார் மீது துறை சார்ந்த விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
 முன்னாள் எம்எல்ஏ பி.டில்லிபாபு, சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தனர்.
 இருவர் கைது?: இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர்கள் 3 பேர் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஏற்காடு பகுதியில் உறவினர்கள் வீட்டிலிருந்த சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ் (22), சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்திருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 ஸ்டாலின், ராமதாஸ் கண்டனம்
 சென்னை, நவ.11: அரூர் மாணவி உயிரிழப்புக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
 மு.க.ஸ்டாலினின் சுட்டுரை பதிவு: தருமபுரியில் 17 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த கொடூரச் செய்தி அறிந்து துயருற்றேன். மனிதம் இப்படியெல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும் வேதனை. இதற்குக் காரணமான கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்.
 ராமதாஸ்: அரூரை அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தில் விடுமுறைக்காக வந்திருந்த பிளஸ் 2 மாணவி கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, உயிரிழந்தார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
 அதிகாலையில் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற மாணவிக்கு இந்தக் கொடுமை நிகழ்ந்துள்ளது. மாணவியின் இல்லத்தில் பயன்படுத்தத்தக்க வகையில் கழிப்பறை வசதி இருந்திருந்தால் இத்தகைய கொடுமை நிகழ்ந்திருக்காது. அந்த வகையில் மாணவியின் உயிரிழப்புக்கு தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். குற்றவாளிகளை கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com