அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்

அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு, தீ விபத்து தடுப்புக்கான உபகரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிக்கப்படுவதால்,
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அதிகரிக்கும் பராமரிப்புச் செலவு: தண்ணீர் சுத்திகரிப்புக்கு வணிக மின்கட்டணம்

அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு, தீ விபத்து தடுப்புக்கான உபகரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிக்கப்படுவதால், பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாக குடியிருப்புவாசிகள் கவலை தெரிவித்தனர்.

 சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஆங்காங்கே அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அங்கு குடியிருப்போர் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துகின்றனர். தீ விபத்தைத் தடுக்க விபத்துத் தடுப்பு முறையையும் செயல்படுத்தியுள்ளனர். இதற்கான மின்கட்டணம் குடியிருப்புகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணமாக இருந்தது.

 இந்நிலையில் சில இடங்களில் கழிவுநீரை வெளியேற்றவும் குடிநீர் அல்லது தண்ணீர் எடுக்கவும், சுத்திகரிக்கவும், வளாகத்தில் தீ விபத்து தடுப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான மின்பயன்பாட்டை வணிக ரீதியில் கணக்கில் எடுத்துக் கொண்டு மின்வாரியம் கட்டணம் வசூலிப்பதாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் அதிருப்தி தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த மின்கட்டண உயர்வால் இரு மாதத்துக்கு குடியிருப்பு வளாகத்தின் பராமரிப்புச் செலவு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 தண்ணீர் சுத்திகரிப்பு, தீ தடுப்பு உபகரணங்களுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு வணிக ரீதியில் கட்டணம் வசூலிப்பது ஏற்க முடியாதது. இதுதொடர்பாக எவ்வித தெளிவான வரையறையையும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிடவில்லை. மேலும் குடியிருப்புகளுக்குத் தேவைப்படும் குடிநீரை விநியோகிக்கவும், கழிவு நீரை வெளியேற்றவும் அரசு முறையான வசதியை ஏற்படுத்தாததால் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இத்தகைய நடவடிக்கை சுயமுயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு வணிக ரீதியிலான கட்டணம் முறையற்றது என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

 இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கு மின்இணைப்பு பெற்று வணிகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக கண்காணிப்பை மின்சார வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இக்குடியிருப்புகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், சில இடங்களில் கடைகள், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடங்கள், பல்பொருள் அங்காடிகள், சமூக நலக்கூடங்களை நடத்தி வருவது தெரியவந்ததை அடுத்து இவற்றுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை வணிகப் பயன்பாட்டுப் பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் சங்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும். தனி குடும்பம் இன்றி வளாகத்துக்கே தண்ணீர் சுத்திகரிப்பு போன்றவை மேற்கொள்ளப்படும் நிலையில்தான் வணிக பயன்பாட்டுக் கணக்கில் சேர்க்கப்படுகிறது.

 ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின்தூக்கிகள், கார் பார்க்கிங் அல்லது வளாகத்துக்கு தேவைப்படும் மின்விளக்குகள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் குடியிருப்புக்கான மின்சாரக் கட்டணமாகவே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தண்ணீர் எடுக்க பயன்படும் மின்சாரப் பம்ப்புகள், அவற்றை சுத்திகரிப்பதற்கான நிலையங்கள் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் வணிக ரீதியில் பயன்படுத்தப்படும் மின் கட்டணமாகவே வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறையை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. காரணம் பராமரிப்புச் செலவு என்ற அடிப்படையில் ஒவ்வொரு குடியிருப்புவாசியிடமும் கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே இதுதொடர்பான விழிப்புணர்வை அடுக்குமாடி குடியிருப்புவாசிகளுக்கு ஏற்படுத்த கடந்த செப்டம்பர் முதல் ஒவ்வொரு வட்டம், வார்டு வாரியாக உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன என்றனர்.

 அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் மின்கட்டணம் தொடர்பாக சந்தித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காண தங்கள் அமைப்பின் சட்டப் பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிரடாய் அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
 - கே.ஆனந்தபிரபு
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com