அடுத்த 15 நாட்களுக்கு தமிழகம் ரொம்ப பிஸி: சொல்வது தமிழ்நாடு வெதர்மேன்

இது வர்தா போலவோ தாணே புயல் போலவே நம்மை எந்த வகையிலும் அச்சுறுத்தாது. எனவே பயப்பட வேண்டாம். இது கரையை கடக்கும் முன்பு பலமிழந்து 
அடுத்த 15 நாட்களுக்கு தமிழகம் ரொம்ப பிஸி: சொல்வது தமிழ்நாடு வெதர்மேன்


சென்னை: எங்கு பார்த்தாலும் கஜா புயல் பேச்சாகவே இருக்கிறது. இன்னும் ஒரு சொட்டு மழை பூமியில் விழவில்லை. புயல் வருமா என்று கேட்பவர்கள் பெரும்பாலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

ஊடகங்கள் கஜா புயலை பற்றி சொல்லிச் சொல்லியே வராமல் போய்விடுகிறது என்று அங்கலாய்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதாவது, வங்கக் கடலில் உருவான கஜா புயல் மிக மெதுவான வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதோடு, திசை மாறி ஒரு யு டர்ன் போட்டிருந்தால் கூட பரவாயில்லை, கிட்டத்தட்ட ஒரு எட்டுப் போட்டு ஓட்டுநர் உரிமம் வாங்கும் அளவுக்கு சுற்றி வருகிறது.

இது பற்றி தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அதாவது, கஜா புயல் வங்கக் கடலில் ஒரு வட்டமடித்து முடித்துவிட்டு தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது கடலூர் - வேதாரண்யம் இடையே 15ம்  தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வர்தா போலவோ தாணே புயல் போலவே நம்மை எந்த வகையிலும் அச்சுறுத்தாது. எனவே பயப்பட வேண்டாம். இது கரையை கடக்கும் முன்பு பலமிழந்து வெறும் புயலாக மட்டுமே தமிழகத்தைத் தாக்க உள்ளது.

முதலில் பாம்பன் - இலங்கை இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் மீண்டும் தனது பாதையை மாற்றிக் கொண்டு கடலூர் - வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னைக்கு நல்ல மழை கிடைக்கும். ஆனால் பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எனவே, வாட்ஸ் அப், பேஸ்புக்கில் வரும் புரளிகளை நம்ப வேண்டாம்.

அதே சமயம், கஜா புயல் கடக்கும் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் தமிழக உள் மாவட்டங்களில் கன மழை முதல் அதிதீவிர கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 60 - 80 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இது அவ்வப்போது இது 90 கி.மீ. அளவுக்கும் உயரும். ஆனால் இது வர்தா அல்லது தாணே புயல் போல தீவிரமாக இருக்காது.

அதே சமயம், தமிழகத்தில் அடுத்த 15 நாட்கள் பருவ மழை தீவிரமாக இருக்கும் நாட்களாக உள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி தமிழகத்துக்கு வரவிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com