தீவிரமடையும் கஜா புயல்: கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியல் இதோ

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிரமடையும் கஜா புயல்: கனமழைக்கு வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியல் இதோ


சென்னை: வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'கஜா' புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை நண்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரியின் சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், கஜா புயல் 15ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் கன மழையும், எந்தெந்த மாவட்டங்களில் பலத்த மழையும் பெய்யும் என்து குறித்த தகவல்கள் வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்து.

அதன்படி, நவம்பர் 15ம்  தேதி தமிழகக் கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே மாவட்டங்களில் 16ம் தேதி மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு, புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு 16ம்  தேதி மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கன மழை என்பது 12 - 20 செ.மீ. மழையாகவும், மிதமான மழை என்பது 7-11 செ.மீ. மழையாகவும் இருக்கும்.

கஜா புயலின் நிலவரம்..
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் 'கஜா' புயல் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை மையம் கொண்டது. இது சென்னைக்கு கிழக்கே 730 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 820 கி.மீ., தொலைவிலும் உள்ளது. இது மேற்கு மற்றும் தென் மேற்கு நோக்கி நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து இப்புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை (நவ.15) நண்பகலில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்புயல் கரையைக் கடக்கும் வரையில், புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை நண்பகல் வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் வீசும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: கஜா புயல் காரணமாக, மீனவர்கள் வியாழக்கிழமை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். சென்னையில் மிதமான மழை பெய்யும். இயல்பான காற்று வீசும்.

கடல் அலை: நாகப்பட்டினம், கடலூர், காரைக்காலில் இயல்பைவிட ஒரு மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பும். "ரெட் அலர்ட்' நிர்வாக தரப்புக்காக தரப்படும் விஷயம். இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
 
கஜா புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. புயல் நகர்வு காரணமாக கடலூர், நாகை, ராமநாதபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்யும். கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படும் என்றார் பாலச்சந்திரன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com