உத்தரமேரூரில் 10-ஆம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டெடுப்பு!

உத்தரமேரூர் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உத்தரமேரூரில் 10-ஆம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டெடுப்பு!


உத்தரமேரூர் அருகே 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே நல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராம வயல்வெளியில் கடந்த 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால சோழர்களால் வழிபடப்பட்ட பிரம்மசாஸ்தா எனும் முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பாலாஜி தலைமையிலான குழுவினர் அண்மைக்காலமாக, உத்தரமேரூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். 
அப்போது, 8ஆம் நூற்றாண்டு கொற்றவை, 11-ஆம் நூற்றாண்டு சூரியன், 13-16 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தலைப்பலி வீரன் எனும் அரிகண்டம் சிலைகள் கண்டறியப்பட்டன. தற்போது, உத்தரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நல்லூர் கிராமத்தில் அக்குழு கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது, விவசாயி ஒருவரின் வயல்வெளிப் பகுதியில் சிவலிங்கம், நந்தி, ஓர் சிலை இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தின் கௌரவ ஆலோசகரும், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான மார்க்சியா காந்தி, அந்தச் சிலையை ஆய்வு செய்தார். ஆய்வில், இச்சிலை கடந்த 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிரம்மசாஸ்தா எனும் முருகன் சிலை என்பது உறுதிசெய்யப்பட்டது. மேலும், இதன் அருகில் உள்ள சிவலிங்கம், நந்தி ஆகியவையும் அதே காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. இது குறித்து வரலாற்று ஆய்வு மையத்தலைவர் பாலாஜி கூறியதாவது: 
நல்லூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மசாஸ்தா எனும் முருகன் சிலை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாகும். இச்சிலை, 2.5 அடி உயரமும், 1.5 அடி அகலமும் கொண்டுள்ளது. கால்முட்டியின் கீழ் 1.5 அடிக்கு புதைந்திருக்கிறது. தலையில் கரண மகுடத்துடன், காதுகளில் பத்ர குண்டலமெனும் பனையோலையிலான காதணி தரித்தும், 4 கரங்களில் வலப்பக்க முதற்கரத்தில் அக்க மாலையுடன் காணப்படுகிறது. அதோடு, இரண்டாவது கரம் அருள் பாலித்தும், இடப்பக்க மேற்கரம் கமண்டலத்துடனும், ஊரு அஸ்தம் எனப்படும் கை மடித்து தொடையின் மீது வைத்த நிலையில் உள்ளது. 
மேலும், மார்பிலும், இடையிலும், ஆபரணங்களுடன் நின்ற நிலையில் காணப்படுகிறது. முருகப் பெருமான் அவதாரங்களில் அக்கமாலை, கமண்டலத்துடன் காட்சியளிப்பது பிரம்மசாஸ்தா எனப்படும். படைப்புக் கடவுளான பிரம்மனிடம் முருகன் பிரணவத்தின் பொருள் கேட்க, அதை அறியாத பிரம்மனை சிறையில் அடைத்து அவனது படைப்புத் தொழிலை முருகன் மேற்கொண்டார். அப்போது, பிரம்மனுக்குரிய அக்கமாலை, கமண்டலம் ஆகியவற்றைத் தாங்கி, ஞான குருவாய் முருகன் நின்ற தோற்றமே பிரம்மசாஸ்தா எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன. 
இவ்வகை முருகன் சிலை, பல்லவர்கள் காலத்திலும், முற்கால சோழர்காலத்திலும் வழிபாடுகளில் இருந்துள்ளது. குறிப்பாக, தொண்டை மண்டலமாகிய காஞ்சிபுரம் குமரகோட்டத்திலும், ஆனூர், திருப்போரூர் ஆகிய இடங்களில் இவ்வகை முருகப் பெருமான் காட்சியளிக்கிறார். தற்போது நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட இந்த முருகன் சிலை அருகில் சிவலிங்கம், நந்தி உள்ளதால், இங்கு சிவன் கோயில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அரிய 10ஆம் நூற்றாண்டு கலைப் பொக்கிஷங்களை தமிழக தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். அதோடு, அவற்றை ஆவணப்படுத்தவும் வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வர்களின் கோரிக்கையாக உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com