ஏழு பேர் விடுதலைக்கு ஆதரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். நான் இன்னும் அரசியலுக்கு முழுமையாக வரவில்லை என்பதை மீண்டும் அவர் வலியுறுத்திக் கூறினார்.
சென்னை விமானநிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த நடிகர் ரஜினிகாத்திடம், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரின் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தை மத்திய அரசு குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது; இதில் உங்கள் நிலைப்பாடு என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், எந்த ஏழு பேர்? அது குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் அதைக் கேள்விப்படுகிறேன் எனப் பதிலளித்திருந்தார்.
ரஜினிகாந்த்தின் இந்த பதில் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. பல்வேறு தரப்பினரும் இதை விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்ல வாயிலில் நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: ஏழு பேர் குறித்து ரஜினிகாந்த்துக்கு ஒன்றுமே தெரியாது என்பதைப் போன்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர். எனக்குத் தெரியும் என்றால் தெரியும் என்பேன். தெரியாது என்றால் தெரியாது என்றுதான் சொல்வேன்.
ஆனால், செய்தியாளர்கள் கேட்ட கேள்வி சற்று தெளிவாக இல்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேர் தொடர்பாக தமிழக அரசு அளித்த கடிதம் என்று கூறியிருந்தால், எனக்கு புரிந்திருக்கும். அதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே ஏழு பேர் விடுதலைக்காக என்று கேட்டால், எந்த ஏழு பேர் என்றுதான் கேட்கத் தோன்றும். அதற்காக, அந்த ஏழு பேர் யார் என்பது தெரியாத அளவுக்கு முட்டாள் அல்ல இந்த ரஜினிகாந்த்.
பேரறிவாளன் அண்மையில் பரோலில் சிறையிலிருந்து வெளியில் வந்தபோது, அவருடன் 10 நிமிஷங்களுக்கு மேலாக தொலைபேசி மூலம் பேசி அவருக்கு ஆறுதல் கூறியவன் நான். 
7 பேரையும் விடுதலை செய்வதுதான் நல்லது: இவர்களின் விடுதலை தொடர்பாக பல கட்டங்களாக உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர், மத்திய அரசு என பல தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இப்போது தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட மனு தமிழக ஆளுநரிடம் உள்ளது.
இப்போது ஆளுர்தான் இதில் முடிவெடுக்க வேண்டும். இந்த ஏழு பேரும் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டனர். அது போதும். மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்வதுதான் நல்லது என்பதே எனது கருத்து.
பாஜக ஆபத்தான கட்சியா? இன்னொன்று பாஜக ஆபத்தான கட்சியா என்பதற்கான எனது பதில் குறித்த சர்ச்சை. பாஜகவைத் தேர்க்கடிக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துகொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு பாஜக ஆபத்தான கட்சியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அப்போது, எதிர்க்கட்சிகள் அவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கும்போது, பாஜக அவர்களுக்கு ஆபத்தான கட்சியாகத்தான் இருக்கக்கூடும் என்றுதான் நான் பதிலளித்திருந்தேன். இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அனைவரும் விடியோ எடுக்கின்றனர். எனவே, ஊடகங்கள் திரித்துக் கூறினால், அது மக்களுக்கு எளிதில் தெரிந்துவிடும். எனவே, ஊடகங்கள் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம் என்றார் அவர்.
பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்கள்:
கேள்வி: பாஜக ஆபத்தான கட்சியா என்பதற்கு ரஜினிகாந்த்தின் கருத்து என்ன?
பதில்: இது குறித்து எனது கருத்தை இப்போது கூற இயலாது. நான் இன்னும் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை. இதை எத்தனை முறை சொல்வது என்று தெரியவில்லை. அன்றாடம் நடைபெறும் அரசியல் நிகழ்வுகளுக்கு நான் கருத்து கூறிக் கொண்டிருக்க மாட்டேன். நான் முழுமையாக அரசியலில் இறங்கும்போது, கருத்துகளைக் கூறுவேன் என்பதை ஏற்கெனவே தெளிவாக கூறியிருக்கிறேன். 
மக்கள் முடிவு செய்வார்கள்: பாஜக ஆபத்தான கட்சியா அல்லது இல்லையா என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சிகள் நினைத்தால், அவர்களுக்கு பாஜக ஆபத்தான கட்சிதான். 
கேள்வி: பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணி குறித்து உங்களுடைய கருத்து?
பதில்: பத்து பேர் ஒன்றாகச் சேர்ந்து, ஒருத்தரை எதிர்க்கிறார்கள் என்றால், அந்த பத்து பேர் பலசாலியா அல்லது அவர்கள் எதிர்க்கும் ஒருவர் பலசாலியா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 
கேள்வி: அப்போது நரேந்திர மோடி பலசாலி எனக் கூறுகிறீர்களா?
பதில்: இப்போதுதான் கூறினேன். பத்து பேர் ஒன்றாக சேர்ந்து எதிர்க்கிறார்கள் என்றால் யார் பலசாலி? இதைவிட தெளிவாக கூறமுடியாது. விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் யார் பலசாலி என்பது தெரிந்துவிடும். 
கேள்வி: பாஜகவுடன் கூட்டணி வைப்பீர்களா?
பதில்: அதை அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடிகர்களுக்கு பயம் போய்விட்டது என அமைச்சர் கூறுகிறாரே?
பதில்: அவர்கள் நல்ல பதவியில் இருக்கின்றனர். எனவே, பேசும்போது யாரையும் புண்படுத்தாமல் அவர்கள் பேச வேண்டும். அதே கேள்வியை நான் கேட்டால் நன்றாக இருக்குமா? எனவே, அவருடைய பதவிக்கு மரியாதை கொடுத்து தன்மையாகப் பேச வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
கேள்வி: சர்கார் மறு தணிக்கை குறித்த உங்களது கருத்து?
பதில்: அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. திரைப்படத்தில் சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றால், அது குறித்து பேசித் தீர்வு காணவேண்டுமே தவிர, திரையரங்குகளுக்குச் சென்று வன்முறையில் ஈடுபடுவதும், பேனர்கள் கிழிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இலவசங்கள் 100 சதவீதம் தேவை. ஆனால், அது யாருக்கு, எதற்குக் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். வாக்கு வங்கியை மட்டுமே கருத்தில் கொண்டு இலவசங்கள் கொடுப்பது சரியாக இருக்காது. 
கேள்வி: 2.0 படத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளதே?
பதில்: அந்தப் பிரச்னையை கர்நாடக அரசு பார்த்துக் கொள்ளும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com