சிறப்பாசிரியர் தேர்வில் தொடரும் குளறுபடி: இறுதிப் பட்டியல் வெளியிடப்படுவது எப்போது?

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகியும், தமிழ்வழி சான்றிதழ்

தையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு ஒரு மாதம் ஆகியும், தமிழ்வழி சான்றிதழ் பிரச்னை காரணமாக, இப்பட்டியலை இறுதி செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் கிடப்பில் போட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி பாடங்களில் சிறப்பாசிரியர் பணியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி போட்டித் தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வை 35,000-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதற்கான மதிப்பெண் பட்டியல் கடந்த ஜூன் 14 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிபெற்ற தேர்வர்களின் பட்டியல் ஜூலை 27 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2, 850 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 13-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது. அப்போது தேர்வர்களின் கல்விச் சான்றிதழ்களும், சாதி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு விவரம் என அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. அத்துடன் வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு, பதிவு காலத்துக்கேற்ப உரிய தகுதிகாண் மதிப்பெண் (அதிகபட்சம் 5 மதிப்பெண்) அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்தப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு பெற்றவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 12-ஆம் தேதி வெளியிட்டது. 
தமிழ்வழிச் சான்றிதழ் சமர்ப்பிக்காத... தையல், ஓவியம் பிரிவுகளில் தமிழ்வழி (மீடியம்) ஒதுக்கீட்டில் அதிக மதிப்பெண் இருந்தும், டிடிசி-க்கு முந்தைய தேர்வான உயர்நிலை (ஹையர் கிரேடு) தேர்வுக்கு தமிழ்வழிச் சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, பல தேர்வர்களின் பெயர் இடம்பெறவில்லை. பணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிடிசி (தொழில் ஆசிரியர் சான்றிதழ்) ஆகியவற்றுக்கு தமிழ்வழிச் சான்றிதழ் அளித்திருந்தும், தங்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் பெற்ற பல தேர்வர்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் அதிக மதிப்பெண் பெற்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
இதைத் தொடர்ந்து, ஹையர் கிரேடு தேர்வை நடத்தும் அரசு தேர்வுத் துறை தமிழ் வழியில் படித்ததற்கு சான்றிதழ் வழங்குவது கிடையாது என தேர்வர்கள் விளக்கிக் கூறியதை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கவில்லை. தேர்வர்களிட மிருந்து கோரிக்கை மனுக்களை மட்டும் பெற்றுக் கொண்டது.
இந்தப் பிரச்னை தொடர்பாக நூற்றுக்கணக்கானோர் நேரில் வந்தும் மனு அளித்துள்ளனர். ஆனால், அந்த மனுக்கள் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 
தமிழ்வழிச் சான்று பிரச்னை தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அரசு தேர்வுத் துறையானது, தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு தமிழ்வழியில் சான்றிதழ் வழங்குவதில்லை என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது. தொழில்நுட்பத் தேர்வை நடத்திய அரசு தேர்வுத் துறையே தமிழ்வழியில் சான்றிதழ் வழங்க இயலாது என்று பலமுறை விளக்கம் அளித்துவிட்டதால், அதிக மதிப்பெண் பெற்றும் தேர்வுப் பட்டி யலில் இடம்பெறாத தையல், ஓவியம் சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.. 
தொடரும் பிரச்னைகள்: சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. 
ஆனால் தையல், ஓவியம் பாடங்களில் ஹையர் கிரேடு தமிழ்வழி சான்றிதழ் பிரச்னை, இடஒதுக்கீடு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் போன்றவற்றால் தற்காலிக தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி செய்யாமல் உள்ளது. 
மேலும், சிறப்பாசிரியர் பணி நியமனம் முடிவடையாததால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடுவது, அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவது, 2019-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை தயாரிப்பது என அனைத்துப் பணிகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முடங்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com