பசுமைப் பட்டாசு தயாரிக்க வழிகாட்டுதல் இல்லை: சிவகாசியில் உற்பத்தி இல்லாமல் தவிக்கும் ஆலை உரிமையாளர்கள்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க எவ்வித வழிகாட்டுதல் இல்லாத நிலையில், சிவகாசியில் தீபாவளிக்கு மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் திறந்து
பசுமைப் பட்டாசு தயாரிக்க வழிகாட்டுதல் இல்லை: சிவகாசியில் உற்பத்தி இல்லாமல் தவிக்கும் ஆலை உரிமையாளர்கள்

5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பசுமைப் பட்டாசுகளைத் தயாரிக்க எவ்வித வழிகாட்டுதல் இல்லாத நிலையில், சிவகாசியில் தீபாவளிக்கு மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் திறந்து உற்பத்தியைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், தில்லியில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமைப் பட்டாசு தயாரிப்பது குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து நாக்பூரில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வகம் (சி.எஸ்.ஐ.ஆர்), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் கழகம் (நீரி) ஆகியவை பசுமைப் பட்டாசு தயாரிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த அமைப்புகள் பசுமைப் பட்டாசு குறித்து அடுத்தாண்டு ஜூலை மாதத்தில் தான் ஆய்வறிக்கை வழங்க இயலும் எனத் தெரிவித்துள்ளது. 
இந்த ஆய்வறிக்கை வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறைக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகே பசுமை பட்டாசுகளில் சேர்க்கப்படும் வேதியியல் பொருள்கள் குறித்து தெரியவரும். மேலும் அதில் உள்ள வேதியியல் பொருள்களின் தன்மை குறித்து பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும். இந்த நடைமுறைகள் நிறைவு பெற்ற பின்னர்தான் பசுமை பட்டாசு தயாரிக்க இயலும் என பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையே நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது. அதேநேரத்தில் இனிமேல் பசுமைப் பட்டாசுகள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தற்போது பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பு குறித்து எவ்வித வழிகாட்டுதல்களும் இல்லை என்கின்றனர் ஆலை உரிமையாளர்கள். 
இந்நிலையில் சிவகாசி சுற்றுவட்டாரங்களில் தீபாவளிக்கு விடுமுறை அறிவித்த 1,070 பட்டாசு ஆலைகள் இன்னும் திறக்கப்படவில்லை. பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் காரணமாக ஆலைகளை திறந்து உற்பத்தியை தொடங்க முடியாத நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உள்ளனர். 
இந்த ஆலைகளில் நேரடியாக சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பியுள்ள துணைத் தொழில்களில் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவால் 5 லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 
எனவே மத்திய, மாநில அரசுகள், தற்போதைய நிலையை உணர்ந்து பட்டாசுத் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரியமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com