பாலாற்றின் குறுக்கே புதிதாக 21 தடுப்பணைகள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிதாக 21 தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலாற்றின் குறுக்கே புதிதாக 21 தடுப்பணைகள்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்


பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிதாக 21 தடுப்பணைகள் கட்ட முயற்சிப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாலாற்றின் குறுக்கே புதிதாக 21 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
21 தடுப்பணைகளும் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில்தான் அமைய உள்ளன. 
ஆந்திர மாநிலத்தில் வெறும் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாலாறு பயணிக்கும் நிலையில், அந்த ஆற்றின் குறுக்கே 22 இடங்களில் அந்த மாநில அரசு தடுப்பணை கட்டியுள்ளது. அது மட்டுமின்றி, ஏற்கெனவே கட்டப்பட்ட பல தடுப்பணைகளின் உயரத்தையும் 18 அடி அளவுக்கு உயர்த்தியுள்ளது.
பாலாறு பாலைவனமாகிவிடும்: இதனால், பாலாற்றில் தமிழகத்துக்குத் தண்ணீர் வருவது அரிதானதாகவும், அதிசயமானதாகவும் மாறியுள்ளது. இத்தகைய சூழலில் புதிய அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.
ஆந்திர மாநிலம் திட்டமிட்டபடி புதிய தடுப்பணைகளைக் கட்டி முடித்து விட்டால் அந்த மாநிலத்தில் 33 கி.மீ. மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே 43 தடுப்பணைகள் இருக்கும். அங்கு பாயும் ஒட்டுமொத்த பாலாறு ஆறாகக் காட்சியளிக்காமல் 43 தனித்தனி ஏரிகளாகக் காட்சியளிக்கும். இதனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்குக் கிடைக்காது. பாலாற்றை நம்பியுள்ள 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் தரிசாக மாறும். 
எனவே, பாலாறு சார்ந்த விவகாரத்தில் இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் சதித் திட்டத்தை தமிழக அரசு முறியடிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com