புயல் அபாயம்: 5 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுக்கள்: வருவாய்த் துறை அறிவிப்பு

கஜா புயலை எதிர்கொள்ள ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
புயல் அபாயம்: 5 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக் குழுக்கள்: வருவாய்த் துறை அறிவிப்பு


கஜா புயலை எதிர்கொள்ள ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த அலுவலர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்படும் பகுதிகள்: கஜா புயலானது கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கரையைக் கடக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை கடலோர மாவட்டங்களில் 2,559 பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளின் 410 அலுவலர்களைக் கொண்டு மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
புயல் பாதித்த இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். 7 ஆயிரத்து 158 பெண்கள் உள்பட 22 ஆயிரத்து 495 பேர் முதல்நிலை மீட்பாளர்களாக உள்ளனர்.
பேரிடர் மீட்புக் குழுக்கள்: புயல் பாதிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு குழுவும், சிதம்பரத்துக்கு 2 குழுக்களும், நாகப்பட்டினத்துக்கு 3 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 25 பேர் இடம்பெற்றிருப்பர்.
மேலும், சென்னை, கடலூருக்கு தலா ஒரு மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும், நாகப்பட்டினத்துக்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேடுதல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
மருந்துகள் இருப்பு: மருத்துவமனைகளின் கீழ் தளத்திலுள்ள ஜெனரேட்டர்களை மேற்புறங்களில் பொருத்திடவும், போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இருப்பில் வைக்கவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய மருந்துகள் போதிய அளவில் இருப்பில் உள்ளன. மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. மின்சாரத் துறை ஊழியர்கள் கீழே விழும் கம்பங்கள், மின் கம்பிகள் மற்றும் மின் மாற்றிகளை அகற்றிட தயார் நிலையில் உள்ளனர். புயல் கரையைக் கடந்த பிறகு, சுகாதாரப் பணியாளர்கள் சாலைகளில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்றிட வழி செய்யப்பட்டுள்ளது.
தயார் நிலையில் படகுகள்: தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு போதிய படகுகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் கடலில் குளிக்கவோ, பொழுதுபோக்கு செயல்களில் ஈடுபடவோ கூடாது என மாவட்ட நிர்வாகங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பின் போது, வருவாய் நிர்வாக ஆணையாளர் கொ.சத்யகோபால், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, பேரிடர் மேலாண்மை ஆணையாளர் ராஜேந்திர ரத்னு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com