ரயில் கொள்ளை வழக்கு: இன்று அடையாள அணிவகுப்பு

ரயில் கொள்ளை வழக்கில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உறுதி செய்யும் வகையில் புழல் மத்திய சிறையில் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது.


ரயில் கொள்ளை வழக்கில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு உறுதி செய்யும் வகையில் புழல் மத்திய சிறையில் புதன்கிழமை அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு கடந்த 2016 ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு புறப்பட்ட சரக்கு ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிட்டு, 4 பெட்டிகளில் இருந்த ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீஸார், மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லத்தைச் சேர்ந்த ப. தினேஷ், ரோ.ரோஹன் பார்தி ஆகிய இருவரை கடந்த செப்டம்பரில் சென்னையில் கைது செய்தனர்.
மத்திய பிரதேசம் குணா மத்திய சிறையிலும், அசோக்நகர் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்த கொள்ளைக் கும்பல் தலைவர் எச்.மோகர் சிங், பி.ருசி பார்தி, ச.கலியா என்ற கிருஷ்ணா, மகேஷ் பார்தி, ந.பிராஜ்கமோகன் ஆகிய 5 பேரை இக்கொள்ளை வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த 30-ஆம் தேதி கைது செய்தனர். இவர்கள் 5 பேரிடமும் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 14 நாள்களாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
14 நாள்கள் போலீஸ் காவல் முடிந்து, சைதாப்பேட்டை 11-ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் 5 பேரும் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை இம்மாதம் 26-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அடையாள அணிவகுப்பு: இந்நிலையில், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி கேட்டு சிபிசிஐடி அதிகாரிகள் அல்லிகுளத்தில் செயல்படும் சென்னை பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதித்துறை நடுவர் மலர்விழி செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தார். விசாரணையின் முடிவில், புழல் விசாரணை கைதிகள் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்துவதற்கு புதன்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
அடையாள அணிவகுப்பு சைதாப்பேட்டை 9-ஆவது நீதித்துறை நடுவர் சுப்பிரஜா முன்னிலையில் நடத்தப்படும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com