ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் : வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2,000 பேர் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, பிற
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற வெளி மாநிலத்தவர்கள்.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்ற வெளி மாநிலத்தவர்கள்.


திருச்சியில் நடைபெற்று வரும் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாமின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, பிற மாநிலங்களைச் சேர்ந்த 2,000 பேர் பங்கேற்றனர். 
திருச்சி காஜாமலை பகுதியிலுள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் திங்கள்கிழமை தொடங்கிய முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த 7,000 பேர் பங்கேற்றனர். இவர்களில் 170 பேர் வரை அடுத்த நிலைக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. முகாமில் பங்கேற்றவர்களின் உயரத்தை சரிபார்த்து, அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் 1,600 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில் தேர்வானவர்கள் அடுத்த போட்டிக்கு அனுப்பப்பட்டனர்.
இதில், சுமார் 2000 பேர் வரை பங்கேற்ற நிலையில், மூன்றுவிதமான முதல்நிலைத் தேர்வுகளுக்குப் பின்னர், 135 பேர் அடுத்த நிலைக்குத் தேர்வாகினர். இவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் இதரத் தேர்வுகள் நவம்பர் 15,16ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
200 பேர் திருப்பி அனுப்பி வைப்பு: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆள் சேர்ப்பு முகாம் தமிழகத்தைத் தவிர்த்த பிற மாநிலங்களுக்குரியது என்று ஏற்கெனவே 117 பிரதேச ராணுவப்படை ஆள்சேர்ப்பு அலுவலகம் தெரிவித்த நிலையில், செவ்வாய்க்கிழமையின் போது தமிழகத்தைச் சேர்ந்த 200 பேர் தேர்வு நடைபெற்ற பகுதிக்கு வந்தனர். அவர்களை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் பங்கேற்ற தமிழக இளைஞர்களின் உயரம் சரிபார்க்கப்பட்டு பின்னர் ஓட்டத்துக்கு அனுமதித்தனர். இவ்வாறு அனுமதித்ததால் நேரம் ஆனதாக வந்த தகவலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை தேர்வு முகாமில் பங்கேற்றவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால், ஓட்டம் நடைபெற்ற பகுதிக்கு அருகிலேயே உயரத்தை சரிபார்த்த பின்னர்தான் அவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும், இதில் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை என்றும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com