புதுவை முதல்வர் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்: துணை நிலை ஆளுநர் கிரண் பேடி

புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து தவறான தகவல்களை மக்களுக்கு பரப்பி வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
புதுவை முதல்வர் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்புகிறார்: துணை நிலை ஆளுநர் கிரண் பேடி


புதுவை முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து தவறான தகவல்களை மக்களுக்கு பரப்பி வருவதாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, புதுவையை ஆளும் காங்கிரஸ் அரசுக்கும், கட்சிக்கும் கெட்டப்பெயரை உருவாக்கும் முயற்சியில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஈடுபடுவதாகவும், அரசு சார்பு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகும் அதை தடுக்கும் முயற்சியில் ஆளுநர் கிரண் பேடி ஈடுபட்டு வருவதாகவும் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு விவரம்: 
புதுவை முதல்வர் தொடர்ந்து தவறான தகவல்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார். அதேநேரம், ஆளுநர் அலுவலகம் தொடர்ந்து பதில் கொடுத்துக் கொண்டும், நிதி விதிகளை பின்பற்றியும் வருகிறது. நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதால், அதை வழங்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. 
அவ்வாறு வழங்கும்போது நாம் எவ்வாறு விதிகளை மீற முடியும்? ஆனால், அதைத்தான் முதல்வர் விரும்புகிறார். நிர்வாகமோ அதை அனுமதிக்காது. நிதி விதிகளை வழங்குவதற்காக நிதித் துறை ஒரு கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை செய்த பின்னர் நிதி விதிப்படி பணத்தைப் பெறுவார்கள்.
பல நிறுவனங்கள் கண்காணிப்பின்றி நிதியை அனுமதிக்க வேண்டும் என்று கேட்கின்றன. அது சாத்தியமில்லை. 
நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தால் நிர்வாக அதிகாரியே பொறுப்பாவார். உண்மையை முதல்வர் ஏன் மக்களிடம் சொல்வதில்லை? நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணியை ஏன் செய்வதில்லை? 
அரசே அனைத்து விதிகளையும் மீறுவதால், அந்த மீறல்களை நியாயப்படுத்த முடியாது. இது மானியத்தை வழங்குவதில் தவறான நிதி முறையாகும். இது குறித்து சுட்டிக்காட்டியும் முதல்வர் சரியான நேரத்தில் முடிவு எடுக்கவில்லை. கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு நாம் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்?
சரியான விதிமுறையை ஏன் இப்போது பின்பற்றக்கூடாது? கடன் வாங்கி திருப்பிச் செலுத்துவதற்கு மாறாக ஏன் சரியாக செயல்படக் கூடாது? கழிவு நீர் வாய்க்கால்களை தூர்வாரவும், ஏரி, குளங்களில் நீர் கொண்டு வந்து சேமிக்கும் வாய்க்கால்களை தூர்வாரவும் நம்மிடம் பணமில்லை.
மக்கள் ஆதரவு இல்லையென்றால் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் தடுக்கப்பட்டிருக்கும். அதனால் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும். ஆனால், தற்போது மேற்கொண்ட தூர்வாரும் பணிகள் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். குற்றம் சொல்வதற்குப்பதிலாக இறுதி நேரத்தில் மக்கள் காப்பாற்றப்பட்டதற்கு முதல்வர் நன்றி தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ஆளுநர் கிரண் பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com