கஜா புயல்... 29,500 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள் சேதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் 29,500 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், 205 மின் மாற்றிகள், 500 கி.மீ. மின் வழித்தடங்கள்
கஜா புயல்... 29,500 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள் சேதம்


கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் 29,500 மின் கம்பங்கள், 102 துணை மின் நிலையங்கள், 495 மின் கடத்திகள், 205 மின் மாற்றிகள், 500 கி.மீ. மின் வழித்தடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இப்புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. எஞ்சிய 4 மாவட்டங்களில் குறைந்த பாதிப்பு ஏற்பட்டது.
29,500 மின் கம்பங்கள், 102 துணை மின்நிலையங்கள் பாதிப்பு: ஏழு மாவட்டங்களில் 29,500 மின்கம்பங்கள், 102 துணை மின்நிலையங்கள், 495 மின் கடத்திகள், 205 மின்மாற்றிகள், 500 கி.மீ. நீளத்துக்கு மின் வழித்தடங்கள் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் தலைமைப் பொறியாளர், மேற்பார்வைப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மின் சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் விரைந்து நடைபெற்றன. 
திருவாரூரில் மிக அதிக பாதிப்பு: திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்பட்டதால் திருச்சி, கோயம்புத்தூர் மாவட்டங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான மின் கம்பங்கள், மின்மாற்றிகள், மின் கடத்திகள், மின்கம்பிகள் மற்றும் மின் தளவாடப் பொருள்கள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தேவைக்கேற்ப பிற மாவட்டங்களிலிருந்து தளவாடப் பொருள்கள் வாகனங்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் பணியும் நடைபெறுகிறது. இப்பணிகளைக் கண்காணிக்க தலைமை அலுவலகத்திலிருந்து ஏற்கெனவே இயக்குநர் (மின் தொடரமைப்பு) அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
எரிசக்தி துறைச் செயலர், மின்வாரிய தலைவர் நேரில் ஆய்வு: முதல்வரின் உத்தரவுக்கிணங்க, எரிசக்தித் துறைச் செயலர் முகமது நசிமுதீன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர், இணை மேலாண்மை இயக்குநர் பி.என். ஸ்ரீதர், மின் தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம், இயக்குநர் பகிர்மானம் எம்.ஏ. ஹெலன் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை கஜா புயலால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு உயர் அலுவலர்கள் குழுவுடன் விரைந்து சென்று சீரமைப்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 
போர்க்கால் அடிப்படையில் சீரமைப்புப் பணிகள்: அதிக பாதிப்பு ஏற்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது. படிப்படியாக மின் விநியோகம் சீரமைக்கப்பட்டு இரண்டு நாள்களுக்குள் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்படும். குறைந்த அளவே பாதிப்பு ஏற்பட்ட பிற மாவட்டங்களில் சீரமைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை இரவுக்குள் முடிக்கப்பட்டு மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மின் பாதிப்பை சரி செய்யும் பணியில் 11,371 பணியாளர்கள், அலுவலர்கள்: சென்னை, நவ.16: கஜா புயலால் ஏற்பட்ட மின் சேதங்களை சீரமைக்கும் பணியில் 11,371 பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயலின் காரணமாக நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், தேனி, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் மின் வழிதடங்கள், மின் கம்பங்கள், மின் மாற்றிகள் , துணை மின் நிலையங்கள் ஆகியவை சேதமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை காலை முதல் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் மீது சாய்ந்து விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகள் அகற்றப்பட்டு மின் சீரமைப்பு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன. மின் சீரமைப்பு பணியில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த 7,776 மின் பணியாளர்களும், பிற மின் வட்டங்களிலிருந்து சிறப்பு பணியாக அனுப்பட்ட 3,400 மின் பணியாளர்களும், 195 அலுவலர்களும் என மொத்தமாக 11,371 பேர் மின்சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைக்கேற்ப கூடுதலாக பணியாளர்கள் பிற மாவட்டங்களிலிருந்து அனுப்பி வைக்கப்படுவர். எனவே அனைத்து பகுதிகளுக்கும் விரைவில் சீரான மின் விநியோகம் செய்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com