கஜாவை எதிர்கொண்டது எப்படி?: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கஜா புயலால் நிறைய அனுபவங்கள் தங்களுக்குக் கிடைத்ததாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செய்தியாளர்களை அவ்வப்போது சந்தித்து புயல் பாதிப்புகளை விளக்கிக் கூறும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து செய்தியாளர்களை அவ்வப்போது சந்தித்து புயல் பாதிப்புகளை விளக்கிக் கூறும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்


கஜா புயலால் நிறைய அனுபவங்கள் தங்களுக்குக் கிடைத்ததாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 
இதுகுறித்து, அவர் தினமணிக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
கஜா புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தகவல்களை வழங்கிக் கொண்டே இருந்தது. கஜா சிறப்பே வானிலை ஆய்வு மையம் கணித்தபடி அது பயணித்ததுதான். அதன் ஒவ்வொரு நகர்வையும் இந்திய வானிலை மையம் சரியாகக் கணித்து நமக்கு அளித்தது.
போதிய காலம் கிடைத்தது: புயலால் அதிகளவு உயிரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டது தமிழக அரசின் சாதனையாகும். இப்போது கிடைக்கக் கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை புயலால் ஏற்பட்டதா அல்லது வேறு காரணிகளால் அதாவது மின்சாரம் தாக்கியது போன்ற காரணங்களால் ஏற்பட்டதா என்பது ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும்.
அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்ததற்குக் காரணமே, புயலின் மெதுவான நகர்வுகள்தான். அது மெதுவாக நகர்ந்து, நகர்ந்து கடலோர மாவட்டங்களுக்குள் வருவதற்கு முன்பே, தாழ்வான பகுதிகளில் உள்ள அனைத்து மக்களையும் நாம் வெளியேற்றி விட்டோம். மேலும், புயலால் ஏற்படும் சேதங்களை முன்பே கணித்து விட்டோம்.
எத்தனை மின் கம்பிகள், மின் கம்பங்கள் தேவைப்படும் போன்றவற்றை அந்தந்த துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர்.
நல்ல அனுபவம்: கடந்த காலங்களில் புயல்கள் தாக்கும் போது, அதன் வேகமும், வீச்சும் வேகமாக இருக்கும். விரைவாக நகர்ந்து போய் விடும். ஆனால், கஜா புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நமக்குப் போதிய கால அவகாசத்தை அளித்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போதிய கால இடைவெளியுடன் மேற்கொள்ள முடிந்தது. 
புயல் கடந்த உடனேயே இயல்பு நிலை திரும்ப வேண்டுமென விழைகிறோம். இதையும் சாத்தியப்படுத்த முடியும். காரணம், கடலோர மாவட்டங்களில் ஏற்கெனவே நிரந்தரமான மீட்பு மற்றும் நிவாரண மையங்கள் 124 ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களிலேயே பொது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே, கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொது மக்கள் அதிகளவு தங்க வைக்கப்படுவதில்லை. இந்தக் காரணத்தால் பள்ளி, கல்லூரிகளை உடனடியாக விடுமுறையின்றி இயக்க முடியும். நிரந்தரமாக உள்ள மீட்பு மற்றும் நிவாரண மையங்களில் தங்கியுள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
அடுத்தடுத்த புயல்கள்: காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் அடுத்தடுத்து உருவாகி புயல்களாகத் தோன்றும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாக செய்திகள் வருகின்றன. எத்தனை புயல்கள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். ஏற்கெனவே கஜா புயலிலேயே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால், இனி வரும் மழை, புயல் காலங்களை எளிதாகவே எதிர்கொண்டு விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
24 மணி நேரம் தொடர் கண்காணிப்பு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் இரவு பகலாக தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டனர். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.காமராஜ், எம்.சி.சம்பத் ஆகியோர் அந்தந்த மாவட்டங்களிலும், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தொடர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com