கணிதம், கணினி அறிவியல் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது

பண்டைய காலத்தில் மட்டுமின்றி இன்றைக்கும் கணிதம், கணினி அறிவியல் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு
கணிதம், கணினி அறிவியல் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது


பண்டைய காலத்தில் மட்டுமின்றி இன்றைக்கும் கணிதம், கணினி அறிவியல் துறைகளில் இந்தியாவின் பங்களிப்பு அளப்பரியது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புகழாரம் சூட்டினார்.
சென்னை லயோலா கல்லூரியில் கணித அறிவியல் சர்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று ஆளுநர் பேசியதாவது: பண்டைய காலம் முதல், இன்று வரை கணிதம், கணினி அறிவியல் துறைகளில் இந்தியா அளப்பரிய பங்களிப்பை அளித்து வருகிறது. அதாவது கி.பி.400-ஆம் ஆண்டு முதல் இந்தியர்கள் கணிதத் துறையில் சாதனை படைத்து வருகின்றனர்.
இந்திய கணிதவியலாளர்களான ஆரியபட்டா, பிரம்மகுப்தா, பாஸ்கரா ஆகியோர் இயற் கணிதத்தில் மிகப் பெரும் பங்களிப்பை அளித்தவர்கள்.
பூஜ்யம் உள்பட...இன்றைக்கு பயன்பாட்டில் இருக்கும் பூஜ்யம் மற்றும் தசம எண் முறை, எதிர்மறை எண்கள், எண் கணிதம், கணிதக் குறியீடு முறை போன்ற அடிப்படை கணித நடைமுறைகள் அனைத்தும் இந்திய கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. 
அதே போன்று இங்கு கண்டறியப்பட்ட சைன், கோசைன் கணிதக் குறியீடுகள், இன்றைக்கு சீனா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு கணித சூத்திரங்களுக்கு அடிப்படையாக உள்ளன.
15- ஆம் நூற்றாண்டுகளில் திரிகோண கணிதத்தில் மிகப் பெரும் பங்களிப்பை இந்திய கணிதவியலாளர்கள் அளித்தனர். உலகப் புகழ்பெற்ற சீனிவாச ராமானுஜன், எண்களின் பண்புகள் பற்றிய எண்கோட்பாடுகள், செறிவெண் கோட்பாடுகள் குறித்த மிகப் பெரிய பங்களிப்பை அளித்தார்.
பங்களிப்பை அளித்த இந்திய கணித மேதைகள்: சாதாரண குடும்பத்தில் பிறந்த கணிதமேதை சகுந்தலாதேவி, கணினி, கால்குலேட்டர்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கினார். அதே போன்று தத்ரேயா ராமச்சந்திர கப்ரேகர், நரேந்திர கர்மார்கர், சி.ஆர்.ராவ், சி.எஸ். சேஷாத்ரி, சத்யேந்திரநாத் போஸ் எனப் பல இந்திய கணித மேதைகள், கணிதத் துறைக்கும், கணினி துறைக்கும் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். இது போன்றவர்களின் பங்களிப்பினால்தான், கணிதத் துறையில் மட்டுமின்றி, கணினித் துறையிலும் இந்தியா இன்றைக்கு உலக நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. 
தமிழகம் முன்னிலை: பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, கணினி மென்பொருள் துறையில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், இந்த கணித அறிவியல் சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்படுவது மிகவும் பொருத்தமானது என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
பங்கேற்றோர்: சர்வதேச கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள ரஷிய துணைத் தூதரக அதிகாரி கென்னடி ரோக்லேவ், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, கல்லூரி ரெக்டர் பாதிரியார் ஜெயபதி பிரான்சிஸ், கல்லூரிச் செயலர் மற்றும் தாளாளர் பாதிரியார் செல்வநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

வரவேற்பு வளைவு சரிவு: நூலிழையில் தப்பிய ஆளுநர்
சர்வதேச கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புறப்பட்டபோது, லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட வரவேற்பு வளைவு பாரம் தாங்காமல் அவருடைய காருக்கு பின்புறம் சரிந்து விழுந்தது.
அவர் கார் சென்ற ஒரு சில விநாடிகளுக்குப் பிறகு இந்த வளைவு விழுந்ததால், விபத்தில் சிக்காமல் ஆளுநர் தப்பினார். இந்தச் சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கல்லூரி வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கூறியதாவது: லயாலோ கல்லூரியில் புதன்கிழமை காலை நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக ஆளுநர் வந்திருந்தார். அவரை வரவேற்பதற்காக, கல்லூரி வளாகத்துக்குள் விழா நடைபெற்ற அரங்குக்கு அருகே பிரமாண்ட வளைவு வைக்கப்பட்டிருந்தது.
பெரிய இரும்புத் தகடுகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்த இந்த வரவேற்பு வளைவின் கால் பகுதிகளை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் வெறும் கயிறுகளைக் கொண்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிற்க வைத்துள்ளனர். 
இதன் காரணமாக, விழாவை முடித்துக்கொண்டு ஆளுநர் புறப்படும்போது, அவருடைய காருக்கு ஒரு சில அடிகளுக்கு பின்னால் சிறிய காற்றுக்கே பாரம் தாங்காமல் அந்த வளைவு சரிந்து விழுந்தது. இதனால், நூலிழையில் ஆளுநர் ஆபத்திலிருந்து தப்பினார்.
இது போன்ற பெரிய வளைவுகளை விழா ஏற்பாட்டாளர்கள் வைக்கும்போது, கயிறுகளைக் கொண்டு மட்டும் கட்டாமல், முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com