டிசம்பர் 3 முதல் வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் சேவை முடங்கும் அபாயம்
டிசம்பர் 3 முதல் வேலைநிறுத்தம்: பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் அறிவிப்பு

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதால் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு 1.1.2017 ஆம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு, அரசு விதிகளின்படி  ஒய்வூதியப் பங்களிப்பு செய்ய வேண்டும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 4ஜி அலைவரிசை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்றோருக்கான ஓய்வூதியத்  தொகையை  உயர்த்தும் வகையில் மறு ஆய்வு செய்ய வேண்டும். இரண்டாவது ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும் உள்பட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதன் கூட்டமைப்பு சார்பில் பலகட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கம் சார்பில், பேரணி, தர்னா, உண்ணாவிரதம் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், 24.2.2018 இல் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருடன் அனைத்துத் தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அமைச்சரால் அளிக்கப்பட்ட சில வாக்குறுதிகள் தீர்வை நோக்கி நகர்ந்தபாடில்லை என்ற காரணத்தாலும்,  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்ட மேற்காணும்  ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள்  கூட்டமைப்பின் முடிவுப்படி டிசம்பர் 3 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட  முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் கூறியதாவது: ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்தோம். ஆனால், கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. போராட்டத்தின் அடுத்தகட்டமாக  டிசம்பர் 3 ஆம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், அதிகாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரை 600 ஊழியர்களும், 200 அதிகாரிகளும் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் பி.எஸ்.என்.எல். சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர் சேவை மையம் முற்றிலுமாக இயங்காது.  புதிய தொலைபேசி இணைப்பு, வேறு இடத்துக்கு தொலைபேசி மாற்றுதல், பழுது ஏற்பட்டால் அதனை சரிசெய்யும் பணி போன்றவை எதுவும் நடைபெறாதது. இதுதவிர பி.எஸ்.என்.எல். கட்டணம் ரீசார்ஜ், சிம்கார்டு விநியோகம் போன்ற பணிகளும் நடைபெறாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com