கஜா புயலால் சேதமடைந்த மின் உபகரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கஜா புயல் காரணமாக 9 மாவட்டங்களில் 84,836 மின்கம்பங்கள், 4,239 கி.மீ. நீளத்துக்கு மின்கம்பிகள், 841 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.
பேராவூரணி பகுதியில் சாய்ந்து கிடக்கும் மின்மாற்றி.
பேராவூரணி பகுதியில் சாய்ந்து கிடக்கும் மின்மாற்றி.

கஜா புயல் காரணமாக 9 மாவட்டங்களில் 84,836 மின்கம்பங்கள், 4,239 கி.மீ. நீளத்துக்கு மின்கம்பிகள், 841 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன. இவற்றை சீர்செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன என்று தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக  நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சேதமடைந்த மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மின்கம்பிகள் தொடர்பாக கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
தற்போது கணக்கிடப்பட்டுள்ள எண்ணிக்கைகளின்படி மிகப்பெரிய சேதத்தை மின்துறை சந்தித்துள்ளது. சேதமடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகளைத் துரிதமாக சீரமைக்கும் பணிகளை மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மின்துறைக்கு சேதம் ஏற்பட்டுள்ள விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 
சேதமடைந்த மின்கம்பங்கள்: ஞாயிற்றுக்கிழமை (நவ.18) பிற்பகல் நிலவரப்படி 84,836 மின்கம்பங்களும், 4, 239 கி.மீ. தொலைவுக்கு மின்கம்பிகளும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளன. இதில் நாகப்பட்டினத்தில் 3,000 உயரழுத்த மின்கம்பங்களும் , புதுக்கோட்டையில் 8,913, தஞ்சாவூரில் 6,124,  திருவாரூரில் 2,375, திண்டுக்கல்லில் 1,198, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 361,  கடலூரில் 66, பிற மாவட்டங்களில் 643 என மொத்தம் 22,680 உயரழுத்த மின்கம்பங்களும், தாழ்வழுத்த மின்கம்பங்கள் நாகப்பட்டினத்தில் 7,000, புதுக்கோட்டையில் 36,814, தஞ்சாவூரில் 2,624,  திருவாரூரில் 8,030, திண்டுக்கல்லில் 3,077, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 1,273, கடலூரில் 354, பிற மாவட்டங்களில் 2,984. ஆக மொத்தம் 84,836 தாழ்வழுத்த மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
மின்கம்பிகள்: உயரழுத்த மின்கம்பிகள் நாகப்பட்டினத்தில் 120 கி.மீ., புதுக்கோட்டையில் 125 கி.மீ., தஞ்சாவூரில் 80 கி.மீ.,  திருவாரூரில் 643 கி.மீ., திண்டுக்கல்லில் 26 கி.மீ., ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 44 கி.மீ., கடலூரில் 6 கி,மீ., பிற மாவட்டங்களில் 108 கி.மீ., என மொத்தம் 1,152 கிலோ மீட்டர் அளவில் சேதமடைந்துள்ளன.
தாழ்வழுத்த மின்கம்பிகள் நாகப்பட்டினத்தில் 350 கி.மீ., புதுக்கோட்டையில் 395 கி.மீ., தஞ்சாவூரில் 120 கி.மீ., திருவாரூரில் 1,685 கி.மீ. திண்டுக்கல்லில் 63 கி.மீ.,  ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 120 கி.மீ., கடலூரில் 36 கி.மீ. பிற மாவட்டங்களில் 318 கி.மீ. என  மொத்தம் 3,087 கிலோ மீட்டர் அளவில் சேதமடைந்துள்ளன.
மின்மாற்றிகள்: நாகப்பட்டினத்தில் 180, புதுக்கோட்டையில் 345, தஞ்சாவூரில் 60,  திருவாரூரில் 170, திண்டுக்கல்லில் 42, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் 4, கடலூரில் 9, பிற மாவட்டங்களில் 31 என மொத்தம் 841 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.
சீரமைப்பு பணியில் 13,629 பணியாளர்கள்: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த 8,216 மின் பணியாளர்களும் பிற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்டுள்ள 5,413 மின் பணியாளர்களும் என மொத்தம் 13, 629 பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள்  சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தேவைக்கேற்ப மேலும் கூடுதல் பணியாளர்களைப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பவும் மின்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இப்பணிகளை மாநில மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் விக்ரம் கபூர் மற்றும் மின்துறை உயர் அலுவலர்கள் நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முகாமிட்டு பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து மின் சீரமைப்பு பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றனர்.

மின்ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம்

கஜா புயலால் சேதமடைந்த மின்சாதனங்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு  நாள்தோறும்  மூன்று நாட்கள் ஊதியத்தை வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின் வாரிய திட்டமிடல் பிரிவு தலைமை பொறியாளர், மண்டல தலைமை மற்றும் மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயலால் சேதமடைந்துள்ள மின்சாதனங்களைச்  சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு உணவு, தேநீர், குடிநீர், தங்குமிடம் போன்ற வசதிகளை செய்து தர வேண்டும். அவர்களுக்கு நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு கை செலவுக்காக ரூ.100 வழங்க வேண்டும். உதவி செயற்பொறியாளர் வரை உள்ள ஊழியர்களுக்கு சீரமைப்பு பணி நடக்கும் நாள்களில் மூன்று நாட்களுக்குரிய ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000 வழங்க வேண்டும். மேலும் இதர செலவு தொடர்பான பதிவேடுகளைமுறையாக பராமரித்து தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com