கஜா புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் முதல்வர் நாளை ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் அவர்  ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கஜா புயலால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.  அமைச்சர்களுடன்  மாவட்ட ஆட்சியர்களும்,  மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.

சேத மதிப்பீடு தயாரிப்பு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (நவ.20) காலை செல்ல உள்ளேன்.

மத்தியக் குழுவுக்கு அனுப்புவதற்காக,  புயல் சேத மதிப்பீட்டைத் தயாரிக்கிறோம். 

பாதிப்புகள் விவரம்?: புயலால் நெல்,  வாழை, தென்னை என பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டன. இவற்றைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.  புயலால் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 735 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.  1,17,624 வீடுகள் சேதமடைந்துள்ளன. 1,70,454 மரங்கள் சாய்ந்ததில் 33,868 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 88,102 ஹெக்டேர்   பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 483 மீட்பு முகாம்களில்  2,49,083 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது.

சுமார் 372 நிலையான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் தொற்றுநோய் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க 1,014 நடமாடும் மருத்துவமனைகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

39,938  மின்கம்பங்களும், 347 மின்மாற்றிகளும் சேதம் அடைந்துள்ளன. மின்கம்பங்களை நிறுவுவதற்காக மின்சாரப் பணியாளர்கள் 12,532 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இத்துடன் முதல்நிலை மீட்பாளர்கள் 14,204 பேர் அந்தப் பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதோடு 175 பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொண்டு வருகின்றன.

குடிநீர்,  மின்சாரம் உடனடியாக வழங்க நடவடிக்கை: கிராமப் பகுதிகளில் அதிகளவில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை ஒரே நாளில் சரிசெய்வது கடினம். மின்கம்பங்கள் முழுவதும் நடப்பட்டு,  கம்பிகள் இழுக்கப்பட்ட பிறகுதான் மின்சாரம் வழங்க முடியும். அதனால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து மக்கள் அதிகளவில் முகாம்களுக்கு வந்து தங்கியுள்ளதால்  அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

மேலும்,  புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே ஜெனரேட்டர் வைத்து பம்ப்செட்டை இயக்கி குடிநீர் வழங்கி வருகிறோம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 65 சதவீதத்துக்கு மேல் மின்கம்பங்கள் சாய்ந்து விட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. முழுமையான விவரங்களைக் கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு: கஜா புயல் காரணமாக, நாகப்பட்டினம்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை,  ராமநாதபுரம்,  திருச்சி, திண்டுக்கல்,  தேனி,  சிவகங்கை,  கடலூர் மாவட்டங்களில்  நவம்பர் 15 முதல் 25-ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின்நுகர்வோர் அபராதமின்றி 30-ஆம் தேதி வரை செலுத்தலாம்.

மீட்புப் பணிக்கு ராணுவம்


சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்கு சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டன. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மீட்புப் பணியையும்,  புயல் சேத நிலவரத்தையும் கண்டறிந்து தேவைப்பட்டால், மத்திய அரசு அதிகாரிகளை வரவழைத்து, ராணுவ மீட்புப் பணிகளுக்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மரங்களை அப்புறப்படுத்துவதும்,  மின்கம்பங்களை நடுவதும்தான் சவாலாக இருக்கிறது. இவை இரண்டையும், வேகமாகத் துரிதமாகச் செயல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

மத்திய அரசிடம் நிவாரணம் கோரப்படும்

மத்திய அரசுக்கு ஏற்கெனவே உத்தேச புயல் சேத விவரங்களை அளித்திருக்கிறோம். முழுவதுமாகச் சேத மதிப்பீட்டைக் கண்டறிந்த பிறகுதான் மத்திய அரசுக்கு அனுப்பி நிவாரணம் பெற முடியும். 

அதுமட்டுமல்ல, கடலோர மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய பேரிடர் குழு நேரில் பார்வையிட்டு சேத மதிப்பீட்டைக் கணக்கிட வேண்டும்.

அரசியல் பாகுபாடு கூடாது: இயற்கை அளித்த சோதனையை மனிதாபிமான முறையில் அனைவரும் நாட வேண்டும். இதில் எதிர்க்கட்சி, ஆளும்கட்சி என்ற பாகுபாடே இருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களே, இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். அதுதான் மனிதாபிமானம் என்றார்.

மாட்டுக்கு ரூ.30,000, ஆட்டுக்கு ரூ.3,000 இழப்பீடு

கஜா புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப் பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட முதல்வரின் அறிக்கை:
முகாம்களில் உள்ளவர்களுக்குத் தேவையான உணவு,  குடிநீர்,  பாய்,  போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.  குடும்பம் ஒன்றுக்கு 10 கிலோ அரிசி,  ஒரு வேட்டி,  ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்  வழங்கப்படுகிறது.

45 பேர் உயிரிழப்பு: புயல் மற்றும் கன மழைக்கு இது வரை 45 பேர் உயிரிழந்துள்ளனர்.  அவர்களுடைய குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ. 10 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாடு ஒன்றுக்கு ரூ. 30,000,  ஆடு ஒன்றுக்கு ரூ. 3,000 வழங்கப்படும். புயலால் 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும்,  30,404 குடிசை வீடுகள் பகுதியாகவும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும். 

புயல் காரணமாக சேதமடைந்த படகுகளை மீன்வளத் துறை மூலம் உடனடியாகக் கணக்கீடு செய்து அறிக்கை கிடைத்தவுடன் இழப்பீடு வழங்கப்படும். 

நிவாரணப் பணிக்கு கூடுதலாக 11 அமைச்சர்கள்

புயல் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதல் அமைச்சர்களை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு:

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும்,  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,  கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கும்,  கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ,  பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோர் திருவாரூர் மாவட்டத்துக்கும், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,  காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் புயல் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com