கேள்விக்குறியாகும் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம்?

திண்டுக்கல்: அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புப் பணிகளை கணிசமாக குறைத்துவிட்டு, கடைகளில் நிறுவப்படும் பெயர் பலகையை ஆய்வு செய்வதற்கு தமிழ் வளர்ச்சித் துறை முக்கியத்துவம்

திண்டுக்கல்: அரசு அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்புப் பணிகளை கணிசமாக குறைத்துவிட்டு, கடைகளில் நிறுவப்படும் பெயர் பலகையை ஆய்வு செய்வதற்கு தமிழ் வளர்ச்சித் துறை முக்கியத்துவம் அளித்து வருவதால், ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் கேள்விக்குறியாகும் நிலை  ஏற்பட்டுள்ளது. 

ஆட்சிமொழி திட்ட செயலாக்க சட்டத்தின்படி, தமிழக அரசு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் முத்திரை, பெயர் பலகை, காலமுறை சுற்றறிக்கை, ஆணைகள், அழைப்பிதழ், அறிவிக்கை கோப்பு, சம்பளப் பட்டியல் உள்ளிட்ட அனைத்தும் தமிழ் மொழியில் இருக்க வேண்டும். 

ஆட்சிமொழி செயலாக்க சட்டத்தினை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் தமிழ் வளர்ச்சித் துறை உருவாக்கப்பட்டது. மாவட்டந்தோறும் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அல்லது துணை இயக்குநர் அலுவலகம் மூலமாக, ஆட்சி மொழி செயலாக்கம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் வளர்ச்சித் துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களால், ஒரு அலுவலர் கூடுதலாக மாற்றொரு மாவட்டத்தையும் கண்காணித்து வருகின்றார். மாதம் நாற்பது ஆய்வுகள் நடத்தி, அதற்கான அறிக்கையினை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் இருந்தும், தமிழகத்திலுள்ளஅரசு அலுவலகங்களில் குறிப்பாக, வாரியங்கள், கழகங்கள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களில் தமிழ் ஆட்சி மொழி செயலாக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

இந்தநிலையில், மாதம் நாற்பதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆட்சி மொழி செயலாக்க ஆய்வு, தற்போது இருபதாக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, உணவகம், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் நிறுவப்பட்டுள்ள பெயர் பலகை தொடர்பான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாதம் நூறு கடைகளில் ஆய்வு நடத்தி, அரசு விதிமுறையை மீறும் வகையில் நிறுவப்பட்டுள்ள பெயர் பலகை தொடர்பாக நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத் துறைக்கு தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் பரிந்துரைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆட்சிமொழி செயலாக்கத்தை செயல்படுத்துவதில் சிக்கல்

அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்களில் மாதம் நாற்பது ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோதிலும், ஆட்சி மொழி செயலாக்கத்தை தமிழ் வளர்ச்சித் துறையால் முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை. இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டிய பணிகள் மீது, தமிழ் வளர்ச்சித் துறையின் கவனம் திசை திருப்பப்பட்டுள்ளதால், ஆட்சி மொழி செயலாக்கம் தொடர்பான கண்காணிப்பு கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ் ஆர்வலர் சகாதேவன் கூறுகையில்:

நகராட்சி, மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில் ஆங்கிலப் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. அதேபோல் காவல்துறை அலுவலகங்களில் 5 சதவீதம் மட்டுமே தமிழ் பயன்பாடு நடைமுறையில் இருந்து வருகிறது.

பல மாவட்டங்களில் பெயரளவுக்கே தமிழ் வளர்ச்சித் துறை ஆய்வு நடத்துகிறது. இனி, அந்த ஆய்விலும் 50 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதால், தமிழை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வரும் அலுவலகங்களிலும் ஆங்கில மொழியின் தாக்கம் அதிகரிக்கக் கூடும். தொழிலாளர் நலத் துறை சார்பில் வசூலிக்கப்படும் அபராதம் பல ஆண்டுகளாக ரூ.50ஆகவே தொடர்கிறது. அபராதத் தொகையை ரூ.1000 ஆக அதிகரித்திருந்தால், 5:3:2 என்ற அரசு விதிப்படி பெயர் பலகை நிறுவுவதை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க முடியும் என்றார்.

பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

கடைகளில் நிறுவப்படும் பெயர் பலகை அரசு விதிப்படி 5:3:2 என்ற விகிதாசாரத்தில், ஆதாவது தமிழ் எழுத்துக்களின் அளவு 5 மடங்கிலும், ஆங்கிலம் 3 மடங்கிலும், பிறமொழியாக இருந்தால் 2 மடங்கிலும் இருக்க வேண்டும். ஆனால், இன்றைக்கு தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. இதனை கண்காணிக்க வேண்டிய தொழிலாளர் நலத் துறை, ஒரு பெயர் பலகைக்கு ரூ.50 மட்டும் அபராதம் வசூலித்துக் கொண்டு, மேல் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில், பெயர் பலகை கண்காணிப்பு பணி தமிழ் வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com