தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மூன்று பேரும் விடுதலை

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்ற மூன்று பேரும் விடுதலை

சென்னை: தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைத் துறையின் கூடுதல் இயக்குநர் இன்று காலை 11.30 மணியளவில் வேலூர் மத்திய சிறைச் சாலைக்கு அனுப்பிய பேக்ஸில், தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை உடனடியாக விடுவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த பேக்ஸ் வந்த ஒரு மணி நேரத்தில், ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2000ஆவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, அதிமுக தொண்டர்கள் தருமபுரியில் பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதில், கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகியோர் பேருந்துக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த வழக்கில் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு மேல்முறையீட்டு வழக்கில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நீண்ட காலமாக சிறையில் இருக்கும் சிறைக் கைதிகள் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் அடிப்படையில், இவர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இவர்கள் மூவரையும் விடுதலை செய்ய அனுமதி அளிக்குமாறு தமிழக அரசு தரப்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்பட்ட மனுவை, ஆளுநர் மாளிகை திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com