புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அலட்சியப்படுத்தும் முதல்வர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஏற்கெனவே, திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதாகக் காரணம் காட்டி, புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும்,  விவசாயிகளையும் முதல்வர் அலட்சியப்படுத்துவதாக திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அலட்சியப்படுத்தும் முதல்வர்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஏற்கெனவே, திட்டமிட்ட நிகழ்ச்சிகள் இருப்பதாகக் காரணம் காட்டி, புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களையும்,  விவசாயிகளையும் முதல்வர் அலட்சியப்படுத்துவதாக திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
 இதுதொடர்பாக, கருணாநிதியின் உடன்பிறப்புகளுக்கு தனது கடிதம் என ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கஜா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் அளித்த முன்னெச்சரிக்கைத் தகவல்களை மாநில அரசின் பேரிடர் மேலாண்மை வாரியம் உடனுக்குடன் வெளிப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுரை வழங்கியது. அரசியல் வேறுபாடு இன்றி, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வெளிப்படையாகப் பாராட்டி இருந்தேன். அதற்காக விமர்சனங்களும் வெளிப்பட்டன. ஆக்கப்பூர்வமான முயற்சியை ஆதரிப்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் நலன் என்பதுதான் எனது பார்வை. 
அதே நேரத்தில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதுதான்,  புயல் வீசிய அந்த இரவில்,  முறையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதைக்  காண முடிந்தது. பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உணவு,  குடிநீர்,  படுக்கை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் போதுமான அளவில் செய்யப்படவில்லை. இது தொடர்பாக  எந்தத் திட்டமிடலும் இல்லை. நீர் நிலைகள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. 
குடிமராமத்துத் திட்டப் பணிகளை செய்திருந்தால் டெல்டா மாவட்டங்களில் மரங்களையும் பயிர்களையும்  காப்பாற்றியிருக்கலாம். 
புயலால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதை நெருங்குகிறது. அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள ரூ. 10 லட்சம் நிவாரணத்தை ரூ. 25 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும். 102 துணை மின் நிலையங்கள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. முழுமையாக மின்வசதி திரும்புவதற்கு குறைந்தபட்சம் ஒரு வார காலம் ஆகும். 7000 ஹெக்டேரில் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 
நான்கு நாள்களாகப் பரிதவிக்கும் மக்களை நேரில் பார்க்க தமிழக முதல்வருக்கு நேரமும் இல்லை, மனதும் இல்லை.
மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை நேரில் காண முடிகிறது. அவர்களின் கோரிக்கைகளை ஆளுங் கட்சியிடம் எடுத்துரைக்கும் கடமையையும் உணர்கிறேன். மேலும், ஆட்சியாளர்கள் பொறுப்பற்றுச் செயல்படும் நிலையில், திமுகவினர் தங்களுடைய நிவாரணப் பணிகளை விரிவடையச் செய்யவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com