எண்ணூர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கசிந்த 2 டன் எண்ணெய்க் கசிவு முழுமையாக அகற்றம் 

எண்ணூர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கசிந்த 2 டன் எண்ணெய்க் கசிவு முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
எண்ணூர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கசிந்த 2 டன் எண்ணெய்க் கசிவு முழுமையாக அகற்றம் 

சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கசிந்த 2 டன் எண்ணெய்க் கசிவு முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காமராஜர் துறைமுகம் சென்னைக்கு அருகே எண்ணூரில் அமைந்துள்ளது. இங்கு எண்ணூர் டேங்க் டெர்மினல் லிமிடெட் என்ற தனியார் கடல்சார் திரவ முனையம் செயல்பட்டு வருகிறது. இங்கு எரிவாயு, எண்ணெய் வகைகள் இறக்குமதி செய்வதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இங்கு சனிக்கிழமை இரவு "எம்.டி. கோரல் ஸ்டார்ஸ்' கப்பல் 15 ஆயிரம் டன் பர்னஸ் ஆயிலுடன் (உலை எண்ணெய்)  காமராஜர் துறைமுக முனையத்தை வந்தடைந்தது.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள சேமிப்புக் கிடங்குக்கு உலை எண்ணெயை அனுப்பும் பணி தொடங்கியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  4 மணியளவில் ஒரு இணைப்புக் குழாய் கழன்று விழுந்தது. இதையடுத்து எண்ணெய் கடலுக்குள் பீரிட்டுக் கொட்டத் தொடங்கியது.  உடனடியாக  ஊழியர்கள் கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறுவதை நிறுத்தினர். இணைப்புக் குழாய் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருசில நிமிடத்திலேயே சுமார் 2 ஆயிரம் கிலோ எண்ணெய் கடலில் கொட்டியது.

இதைத் தொடர்ந்து எண்ணெய்க் கசிவு குறித்து துறைமுக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரன் தலைமையில் எண்ணெய்க் கசிவை அகற்றும் பணி தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு, கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோரக் காவல்படையின் இரு ரோந்துக் கப்பல்கள்,  சென்னைத் துறைமுகத்தின்  எண்ணெய்க் கசிவு அகற்றும் வாகனங்கள் எண்ணூர் துறைமுகத்துக்கு விரைந்து வந்து எண்ணெய்க் கசிவை அகற்றும் பணியில் ஈடுபடத் தொடங்கின.  

எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வந்த அதேநேரம்  மேலும் உதவிடும் வகையில், கடலோரக் காவல் படையின் மாசுக் கட்டுப்பாட்டு சிறப்புக் கப்பலான "சமுத்ரா பகெரேதார்' விசாகப்பட்டினத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. 

இந்த கப்ப ல் எத்தகைய எண்ணெய், ரசாயனப் படலங்களையும் தண்ணீரிலிருந்து பிரித்து அழிக்கும் தன்மை கொண்ட அதிநவீன உபகரணங்கள் இக்கப்பலில் இடம்பெற்றுள்ளன. 

எனவே இதன் உதவியுடன் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவு முற்றிலும் அகற்றப்படும். இதனால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படாத வகையில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  எண்ணூர் துறைமுகத்தில் கப்பலிலிருந்து கசிந்த 2 டன் எண்ணெய்க் கசிவு முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் மேலும் பரவாமல் இருப்பதற்காகவும், மிதக்கும் எண்ணெய் படலத்தை அகற்றுவதற்கு வசதியாகவும் அந்த சரக்கு கப்பலை சுற்றிலும் முதலில் மிதவை தடுப்புகள் போடப்பட்டது.  

உடனடியாக ஆகாய மார்க்கமாகவும், கடலின் உள்ளே இருந்தும் எண்ணெய் படலம் எதுவரையிலும் பரவி இருக்கிறது? என்பது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. 
சிறப்பு கப்பலில் உள்ள எண்ணெய் உறிஞ்சும் எந்திரம் மற்றும் உறிஞ்சும் அட்டைகள் மூலம் கடலில் கொட்டிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. 

அதனடிப்படையில் கடலில் கொட்டப்பட்ட இரண்டு டன் கச்சா எண்ணெய் முற்றிலும் அகற்றப்பட்டது என துறைமுக நிர்வாகம் சார்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com