புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு படிப்படியாக மின் விநியோகம்: மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி

கஜா புயல் சீற்றத்தால், பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்கள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதால், நகர் மற்றும் கிராமப்புறங்களில் படிப்படியாக
புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு படிப்படியாக மின் விநியோகம்: மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி

கஜா புயல் சீற்றத்தால், பாதிக்கப்பட்ட மின் கம்பங்கள், மின்மாற்றிகள் மற்றும் துணை மின்நிலையங்கள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதால், நகர் மற்றும் கிராமப்புறங்களில் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்துள்ளார்.
 கஜா புயல் பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காக நாகப்பட்டினத்துக்கு வருகை தந்த அமைச்சர் பி. தங்கமணி, மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியது:
கஜா புயல் பாதிப்பால், மாவட்டத்தில் 98 ஆயிரம் மின்கம்பங்களும், 846 மின்மாற்றிகளும், 201 துணை மின்நிலையங்களும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் 56 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இதுவரை 18 லட்சம் மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 
நாகப்பட்டினம் நகராட்சியில் 87 சதவீதமும், திருவாரூர் நகராட்சியில் 50 சதவீதமும், தஞ்சாவூர் நகராட்சியில் 95 சதவீதமும், புதுக்கோட்டை நகராட்சியில் 50 சதவீதமும், அனைத்து அரசு மருத்துமனைகளுக்கும் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதால், ஒருசில தினங்களில் நகர பகுதிகளுக்கு முழுமையாக மின்விநியோகம் செய்யப்படும்.
ஊரக பகுதிகளைப் பொறுத்தவரை சேதம் அதிகமாக இருக்கிறது. வயல்வெளிகளிலிருந்த மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அதிகளவு சேதமடைந்துள்ளதால், படிப்படியாக இரு வாரகாலத்துக்குள் முழுமையாக மின்விநியோகம் சீரமைக்கப்படும்.
புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை  மாவட்டங்களில் சுமார் 14,500 மின்வாரிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலத்திலிருந்து 1,000 பேரும், கேரளத்திலிருந்து 150 மின்வாரிய ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம் பகுதிகளில்தான் மின்கம்பங்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இப்பகுதிகளில் வெளியூரிலிருந்து வரும் மின்சார ஊழியர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். 
பொதுமக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளைச் செயவதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசின் முதன்மைச் செயலாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் முகாமிட்டு, சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடுகின்றனர். மேலும், சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மின்வாரிய ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் சீரமைப்புப் பணிகளை செய்து வருகின்றனர். ஆகையால், வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். 
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளோம். நிவாரண உதவிகளை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார். மின்சாரம் இல்லாமல் கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்காக கிராமங்களுக்கு ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மின்சார உபகரணங்கள் போதுமான அளவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆகையால், மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் அமைச்சர் பி. தங்கமணி. 
பேட்டியின்போது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தொழில்துறை அமைச்சர் பி. பெஞ்சமின், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், சட்டப் பேரவை உறுப்பினர்கள் எம். தமிமுன் அன்சாரி (நாகை), ஓம் சக்தி சேகர் ( புதுச்சேரி) மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com