புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதம் அடைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிளையார் குளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை
புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதம் அடைந்துள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

புதுக்கோட்டை: கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிளையார் குளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். 

தமிழகத்தைத் தாக்கியா கஜா புயலானது டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கடுமையான சேதத்தினை உண்டாகியுள்ளது. உயிர் சேதங்களை விடவும் கடுமையான பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தென்னை மற்றும் வாழை மரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன அதற்கான நிவாரணப் பணிகளும் பல்வேறு கட்டங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன.  

நிவாரண பணிகளுக்காக உடனடியாக ரூ.1000 கோடி விடுவித்து, முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களுக்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடுமையாக காயமடைந்தவர்களுக்கு ரூ..1 லட்சமும், சிறிய அளவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.

முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம். பகுதியளவு சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.4100 நிவாரணம். முழுமையாக குடிசைகளை இழந்தவர்களில் தகுதி வாய்ந்தோருக்கு புதிய வீடு கட்ட உதவி. 

தென்னை விவசாயிகளுக்கான உதவிகளில் 175 மரங்களைக் கொண்ட ஒரு ஹெக்டேர் தென்னை வயல் சேதமடைந்தவர்களுக்கு, ஹெக்டேருக்கு ரூ.1,92,500 நிவாரணம். அதே சமயம் மறு சாகுபடி பணிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.72100 நிவாரணம். 

சொட்டுநீர் பாசனம் செய்வோருக்கு 100 சதவீதம் முழுமையாக மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 20 சதவீதம் மானியமும் வழங்கப்படவுள்ளது. நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேஷ்டி, ஒரு சேலை மற்றும் 4 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட உள்ளது. 

அதேபோல பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்பட்ட உள்ளது. பாதிக்கப்பட்டோருக்கு ஆவின் நிறுவனம் மூலமாக பால் வழங்க ஏற்பாடு செய்யப்படும். மின்சார பாதிப்புகளை சரிசெய்யும் பணிகளுக்கு மின்சார வாரியத்திற்கு உடனடியாக ரூ.200 கோடி வழங்கப்படும். இதேபோல புயலால் உயிரிழந்த கால்நடைகளுக்கும் தனித்தனியாக மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் புயல் சேதத்தை பார்வையிடுவதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் இன்று காலை 5.30 மணிக்கு  புறப்பட்டார். பின்னர் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு ஹெலிகாப்டரில் சென்ற முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் மச்சுவாடி, மாப்பிள்ளையார்குளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர். அங்கிருந்த அதிகாரிகள், முதல்வருக்கு புயல் சேதம் குறித்து விளக்கினர். 

பின்னர், மாப்பிள்ளையார்குளம் பகுதியில் ஆய்வுக்குப்பின் நிவாரண நிதியும், நிவாரண பொருட்களையும், உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதி வழங்கினார். வீடுகளை இழந்த 36 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினர்.

பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்பு குறைந்துள்ளது. புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி வருகிறது. புதுக்கோட்டை நகரத்தில் பல வீதிகளில் பல ஆண்டுகளாக இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 

புயல் வருவதற்கு முன்பாகவே, தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால் பாதிப்புகள் குறைந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

புதுக்கோட்டை நகரத்தில் நாளை மாலைக்குள் மின் இணைப்பு வழங்கப்படும்.
கிராமப்பகுதிகளில் 5 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும். 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். யாரும் விடுபடமாட்டார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.  

இயற்கை சீற்றம் எப்படி வரும் என்பதை யாரும் கணிக்க முடியாது. அரசு முழு மூச்சுடன் தேவையானதை செய்கிறது. நிவாரணப்பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், அப்போது தான் சீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெறும்.

பேரிடரின் போது கேரளாவைப்போல், தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இல்லை. மனசாட்சியுடன் எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் அனைவரும் செயல்பட வேண்டும்.

கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமரை 22 ஆம் தேதி சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் கேட்டுள்ளோம், நாளை மாலை நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு முழு அறிக்கை அனுப்பி, உரிய நிதி பெறப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர், துணை முதல்வருடன் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு வருகின்றனர்.

முதல்வரை பொதுமக்கள் நெருங்காதபடி சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளது. மேலும் முதல்வரை சுற்றி அதிமுகவினரை தவிர வேறு யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com