புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால  அடிப்படையில் மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி உடனடியாக விடுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைப் போர்க்கால  அடிப்படையில் மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி உடனடியாக விடுவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது, தேவையான நிதியை விடுவிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார்,  தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

புயல் காரணமாக நாகப்பட்டினம்,  திருவாரூர்,  தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 514 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, 2,51,674 பேர் தங்கியுள்ளனர்.  
தலா ரூ.5,000 நிவாரணம்: முகாம்களில் உள்ளவர்களுக்கு கூடுதலாக ஒரு வேட்டி, சேலை, கூடுதலாக 4 லிட்டர் மண்ணெண்ணெய், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம்,  துணிகள், பாத்திரங்கள் வாங்க ரூ.3,800 அளிக்கப்படும்.

குடிசை வீடுகள் சேதம்: முழுவதும் சேதமடைந்த குடிசைக்கு ரூ.10 ஆயிரம், பகுதி சேதமடைந்த குடிசைக்கு ரூ.4,100 அளிக்கப்படும். முழுவதும் சேதம் அடைந்த குடிசைகளுக்கும், வீடுகளுக்கும் பதிலாக புதிதாக வீடு கட்ட உரிய நிதி அளிக்கப்படும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நெடுஞ்சாலைகள் துறைக்கு தலா ரூ.25 கோடி, பொதுப்பணித்துறைக்கு ரூ.10 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.2 கோடி, குடிநீர் வடிகால் வாரியம்,  நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள் இயக்குநரகம்,  நாகப்பட்டினம்,  திருவாரூர்,  தஞ்சாவூர்,  புதுக்கோட்டை மாவட்டங்களுக்குத் தலா ரூ.5 கோடி, திண்டுக்கல்லுக்கு ரூ.2.5 கோடி, சிவகங்கை,  ராமநாதபுரம்,  கரூர்,  திருச்சி,  தேனிக்கு தலா ரூ.1 கோடி அளிக்கப்படும்.

மின்கம்பங்கள்: மின்வாரியத்துக்கு ரூ.200 கோடி அளிக்கப்படும். நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முதல் கட்ட கணக்கீட்டின்படி,  4,844 மீன்பிடி படகுகளும், 5,550 மீன்வலைகள், 5,727 படகுகளின் இயந்திரங்கள் சேதம் அடைந்துள்ளன.

வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42 ஆயிரம், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டு மரங்களுக்கு ரூ.20 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த கண்ணாடி நாரிழை படகுகள், வலைகளுக்கு ரூ.85 ஆயிரம், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.30 ஆயிரம், முழுவதும் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சம் வரையும் அளிக்கப்படும். வலைகள் மட்டுமே சேதம் அடைந்திருந்தால் ரூ.10 ஆயிரம், இயந்திரம் பழுது நீக்கம் செய்ய ரூ.5 ஆயிரம் அளிக்கப்படும்.

ரூ.1000 கோடி நிதி: கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புப் பணிகளுக்கு நிதியுதவி அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு ரூ.1,000 கோடி உடனடியாக விடுவிக்கப்படும்.

நன்கொடைகள் மூலம் உதவுங்கள்

கஜா புயலை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக நன்கொடைகள் மூலமாக உதவ வேண்டுமென முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட வேண்டுகோள் செய்தி:-

மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள்,  நிறுவனங்கள்,  அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ வேண்டும். தமிழக அரசால் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் சீரமைப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதர பயிர்களுக்கு நிதி

நெல்,   கரும்பு, வாழை, காய்கறிகள், மலர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, பயிர்கள் மறுசாகுபடி செய்யும் செலவில் 40 முதல் 50 சதவீதம் மானியமும் அளிக்கப்படும். முந்திரி ஹெக்டேருக்கு ரூ.18,000, அவற்றை வெட்டி அகற்ற மரத்துக்கு ரூ.500,  மறுசாகுபடி செய்ய 40 முதல் 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.

தென்னை மரத்துக்கு ரூ.1,100

தென்னை மரத்துக்கு நிவாரணமாக ரூ.600, அவற்றை வெட்டி அகற்ற ரூ.500 என ஒரு மரத்துக்கு ரூ.1100 அளிக்கப்படும்.

இது தொடர்பாக  முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:-

இதுவரையான கணக்கெடுப்பின்படி 12 மாவட்டங்களில் 88,102 ஹெக்டேர் நெல், தென்னை உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 32,706 ஹெக்டேர் நெற்பயிர்களும், 30,100 ஹெக்டேர் தென்னை மரங்களும், 7,636 ஹெக்டேர் மக்காச்சோளமும்,  4, 747 ஹெக்டேர் வாழையும்,  4000 ஹெக்டேர் காபி,  பயறு,  பருத்தி, முந்திரி,  பலா மரங்களும், 3, 253 ஹெக்டேர் முந்திரி பயிர்களும், 500 ஹெக்டேர் கரும்பு பயிர்களும், 945 ஹெக்டேர் மா மரங்களும், 2,707 ஹெக்டேர் காய்கறி பயிர்களும் சேதம் அடைந்துள்ளன.

தென்னை மரத்துக்கு ரூ.600, அதை வெட்டி அகற்ற ஒரு மரத்துக்கு ரூ.500 என மொத்தம் ரூ.1,100 அளிக்கப்படும். சுமார் 175 மரங்கள் நடப்பட்டுள்ள ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 500 நிவாரணம் அளிக்கப்படும்.
மறுசாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.72 ஆயிரத்து 100 வழங்கப்படும். இதன்மூலம் நிவாரணம் மற்றும் மறுசாகுபடிக்கு தென்னை விவசாயிகள் ஹெக்டேருக்கு ரூ.2 லட்சத்து 64 ஆயிரத்து 600 பெறுவர். சொட்டு நீர்ப் பாசனத்துக்கு சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் கொடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com