தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு 3 பேர் விடுதலை: ஆளுநர் மாளிகை விளக்கம்

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 3 பேரை விடுவிக்கக் காரணங்கள் என்ன என்பதை ஆளுநர் மாளிகை விளக்கியுள்ளது.
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு 3 பேர் விடுதலை: ஆளுநர் மாளிகை விளக்கம்


தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த 3 பேரை விடுவிக்கக் காரணங்கள் என்ன என்பதை ஆளுநர் மாளிகை விளக்கியுள்ளது. மேலும், மூவர் விடுதலை தொடர்பாக, தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே நடைபெற்ற சட்டரீதியான நிகழ்வுகள் குறித்தும் அதில் விளக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து, ஆளுநர் மாளிகை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று சிறையில் இருந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், மது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டம் 161-ன் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகள் பற்றியும், சட்டப்பூர்வ நிலைப்பாடுகள் குறித்தும் கருத்தில் கொள்வது அவசியமாயிற்று.
எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி, கைதிகளை விடுவிப்பதற்கான உத்தரவை தமிழக உள்துறை (சிறைகள் பிரிவு) கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி பிறப்பித்தது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-ன் படி ஆயுள் தண்டனை பெற்று சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 1,858 பேரை ஒட்டுமொத்தமாக விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியது.
இந்த விஷயத்தில் ஆயுள் தண்டனைக் கைதிகளை ஒட்டுமொத்தமாக விடுவிக்க இயலாது என மறுத்த ஆளுநர், ஒவ்வொரு சிறைவாசியின் குற்றங்கள், தண்டனைகளை தனித்தனியாக ஆய்வு செய்த பிறகே விடுவிக்க இயலும் என்றார். மேலும், குறைந்தபட்ச சிறைத் தண்டனை என்பதை தமிழக அரசு தனது உத்தரவில் 5 ஆண்டுகளாகக் குறிப்பிட்டிருந்தது. இதனை 10 ஆண்டுகளாகக் குறிப்பிடவும் அறிவுறுத்தினார். ஆளுநர் மாளிகையின் வழிகாட்டுதல்கள்படி புதிய உத்தரவானது கடந்த மே 3-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.
திருப்பி அனுப்பிய ஆளுநர்: அரசமைப்புச் சட்டம் 161-ன் படி, இதுவரை 1,627 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை விடுவிக்க ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். மூன்று பேரின் விடுதலையைப் பொறுத்தவரையில், அவர்களது வழக்குகள் தொடர்பான கோப்புகள் மற்ற ஆயுள் தண்டனை கைதிகளின் கோப்புகளுடன் இணைத்து மொத்தமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கோப்பாக ஆராயும் போது, மூன்று பேரின் விடுதலைக்காக தமிழக அரசு செய்திருந்த பரிந்துரையை ஏற்க மறுத்து அதுதொடர்பான கோப்புகளை தமிழக அரசிடம் திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
தலைமை வழக்குரைஞர் கருத்துகள்: இந்த கோப்புகளை மறுஆய்வு செய்த தமிழக அரசு, ஆளுநரின் பரிந்துரைக்காக கடந்த 25-ஆம் தேதியன்று மீண்டும் அனுப்பியது. இதன்பின்பு, தமிழக அரசு தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயளாளர் ஆகியோர் ஆளுநரை கடந்த 31-ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினர். அப்போது, மூன்று பேர் தொடர்பான வழக்குகளின் விவரங்களையும், அவர்கள் உள்நோக்கத்துடன் மாணவிகளைக் கொல்லவில்லை என்பதையும் விளக்கிக் கூறினர். இதைத் தொடர்ந்து, அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் மற்றும் சட்டப்பூர்வமான கருத்துகளைத் தெரிவிக்கும்படி அரசு தலைமை வழக்குரைஞரை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
அரசு தலைமை வழக்குரைஞர் தனது சட்டப்பூர்வ கருத்துகளில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தார். அதாவது மூன்று பேரின் மறுசீராய்வு மனு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை அரசு தலைமை வழக்குரைஞர் குறிப்பிட்டிருந்தார். அதில், தங்களது அரசியல் தலைவருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிர்ப்பைக் காண்பிக்கும் நோக்கில் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்கிற வகையில் மூன்று பேரும் செயல்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கும் (கல்லூரி மாணவிகள்) மூன்று பேருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பாதித்தோரை மூன்று பேருக்கும் யாரென்றே தெரியாது. இந்தச் சம்பவத்தில் எந்தத் திட்டமிடலும் இல்லை. கண் இமைக்கும் நேரத்தில் சம்பவம் நிகழ்ந்து விட்டது என நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி, சிறைக் கைதிகளை விடுவிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உள்பட்டே மூன்று பேரின் வழக்குகளும் வருவதாக அரசு தலைமை வழக்குரைஞர் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு, மூன்று பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை மறுசுற்றுக்கு விட்டது. அதாவது, உள்துறைச் செயலாளர், சட்டத் துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர், சட்டத் துறை அமைச்சர், முதல்வர் ஆகியோரின் வழியாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மூன்று ஆயுள் தண்டனை கைதிகளால் உள்ளூர் சமுதாயத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது என்பதாலும், மாணவிகள் இறப்பு, நடந்த நிகழ்வுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மூன்று பேரும் 13 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்ததாலும் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 161-ன்படி விடுவிக்கப்பட்டனர் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com